பால் விலை உயர்வு: தலைவர்கள் கண்டனம்.. விலையை குறைக்க பொதுமக்கள் கோரிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
பால் விலை உயர்வு: தலைவர்கள் கண்டனம்.. விலையை குறைக்க பொதுமக்கள் கோரிக்கை

சென்னை: தமிழகத்தில் ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டு இருப்பதற்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தங்கள் தலையில் விழுந்த பேரிடி என்று சாமானிய மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பால் விலை உயர்வு காரணமாக டீ, காபி விலை ரூ3 உயருகிறது. தமிழகத்தில் தினமும் 2 கோடி லிட்டர் பால் உற்பத்தியாகிறது.

இதில் 1. 76 கோடி லிட்டர் பால் விற்பனைக்கு வருகிறது. ஆவின் நிறுவனம் மட்டும் சுமார் 37 லட்சம் லிட்டர் பாலை கொள்முதல் செய்கிறது.

அவ்வாறு கொள்முதல் செய்யப்படும் பால் பதப்படுத்தப்பட்டு, சமன்படுத்தப்பட்டு 200 மி. லி. , 500 மி. லி, 1000 மி. லி. அளவு கொண்ட பால் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு உள்ளூர் நுகர்வோர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று பால் விலையை அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது. இதுதொடர்பாக ஆவின் நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், பசுந்தீவனம், கலப்புத் தீவனம், உலர் தீவனம், தவிடு, புண்ணாக்கு ஆகியவற்றின் விலை மற்றும் இதர இடுபொருட்களின் விலை கடந்த நான்கு ஆண்டுகளில் உயர்ந்துள்ளது.



அதனால், பால் கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, கிராம அளவில் உள்ள தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள 4. 60 லட்சத்திற்கும் மேலான பால் உற்பத்தியாளர்கள் பயன் அடையும் வகையில், பசும்பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 28 ரூபாயிலிருந்து 32 ரூபாயாகவும், அதாவது லிட்டர் ஒன்றுக்கு 4 ரூபாய் உயர்த்தவும், எருமைப்பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 35 ரூபாயிலிருந்து 41 ரூபாயாகவும், அதாவது லிட்டர் ஒன்றுக்கு 6 ரூபாய் உயர்த்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் பால் விலை உயர்வு அறிவிப்பை தொடர்ந்து இருநிலை சமன்படுத்திய பால் (மெஜந்தா) ஒரு லிட்டர் ரூ34லிருந்து ரூ40 ஆக விலை உயர்கிறது.

அதே ேபால சமன்படுத்திய பால் (நீலம்) ஒரு லிட்டர் ரூ37லிருந்து ரூ43, நிலைப்படுத்திய பால் (பச்சை) ஒரு லிட்டர் ரூ41லிருந்து ரூ47, நிறை கொழுப்பு பால் (ஆரஞ்சு) ஒரு லிட்டர் ரூ45லிருந்து ரூ51 ஆகவும் விலை உயர்கிறது.

இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது. தமிழக அரசின் இந்த அதிரடி அறிவிப்பால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே, விலைவாசி உயர்வு விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்நிலையில் பால் விலை உயர்வுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் டுவிட்டர் பதிவு:  பால் விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தலையில் ெபரும் சுமை ஏற்றப்பட்டுள்ளது. தரமான பால் விநியோகத்தை உறுதி செய்யவே, இந்த விலை உயர்வு என அரசு கூறுகிறது.

தரமான பாலை விநியோகிப்பது அரசின் கடமை அல்லவா?. கடமை தவறிய அரசு சுமையை மக்கள் தலையில் போடுவது சரியா என்று தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் : பால் கொள்முதல் விலை பசும்பால் லிட்டருக்கு ரூ. 4, எருமை பால் லிட்டருக்கு ரூ. 6 வரை கொடுக்கிறார்கள்.

ஆனால், எல்லா பாலுக்கும் சேர்த்து ரூ. 6 வரை உயர்த்தியுள்ளனர். பொதுமக்கள் பாதிக்கிறவாறு இப்படி விலையை உயர்த்தி இருப்பது சரியல்ல.

சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பேசும் போது, பொதுமக்கள் நலன் பாதிக்கப்படாதவாறு பால் உயர்வு இருக்கும் என்று தெரிவித்தார். ஆனால், இன்றைக்கு பசும்பால் உற்பத்தி யாளருக்கு ரூ. 4, அதை வாங்கும் நுகர்வோருக்கு ரூ. 6 உயர்த்தி நிர்ணயம் செய்து இருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.

இந்த விலை உயர்வை தமிழக அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும். மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன்: கடந்த 2014ல் பால் விலையை உயர்த்தினார்கள்.

4 வருடமாக விலை உயர்த்தவில்லை. இந்நிலையில் பால் உற்பத்தியாளர்கள் தங்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.



இப்போது பசும்பாலுக்கு ரூ. 4ம், எருமைபாலுக்கு ரூ. 6 என கொள்முதல் விலையை ஏற்றியுள்ளனர். இப்போது எருமைபால் அதிகம் வருவதில்லை.

பசும்பால் மட்டுமே வரும். பசும்பாலுக்கு ரூ. 4 வரை கொள்முதல் விலை உயர்த்தியுள்ளனர்.

அதே நேரத்தில் பால் விலையை லிட்டருக்கு ரூ. 6 வரை சகட்டு மேனிக்கு உயர்த்தியுள்ளனர். கொள்முதல் விலை ஏற்றினால் கூட விற்பனை விலையை இந்த அளவுக்கு உயர்த்த வேண்டும் என்ற அவசியம் இல்லை.

இந்தமாதிரியான அத்தியாவசியமான பொருட்களை அப்படியே வாங்கி லாபத்திற்கு விற்க கூடாது. வியாபார நோக்கத்தில் அரசு ஈடுபட கூடாது.

இது போன்ற பொருட்களுக்கு அரசு மானியம் தந்து விலை உயர்த்த கூடாது. ஒரு வியாபாரி செய்கிற வேலை அரசு செய்கிறது.

இந்த அரசு சமூக நோக்கத்தோடு செயல்படவில்லை. சில விஷயங்களில் லாபம், நஷ்டம் பார்க்க கூடாது.

கொள்முதல் விலை உயர்த்துவதில் மாற்றுக்கருத்து இல்லை.

அதனால் விற்பனை விலையை உயர்த்துவதில் எந்த விதத்தில் நியாயம்.

இதை வியாபார நோக்கோடு அரசு பார்க்க கூடாது. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் : பால் விற்பனை விலையை பழனிச்சாமி அரசு திடீரென லிட்டருக்கு 6 உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது.

அதிலும், விலை உயர்வு குறித்த அமைச்சரின் பேச்சு ஆணவனத்தில் வெளிப்பாடாக இருக்கிறது. ஆவினில் தலைவிரித்தாடும் நிர்வாக சீர்கேடுகளை சரி செய்வதுடன் தமிழகம் முழுவதும் பால் உற்பத்தி கூட்டுறவு சங்கங்களை முறையாக செயல்படுத்தினாலே விற்பனை விலையை அதிகரிக்காமல் கொள்முதல் விலையை உயர்த்தி தர முடியும்.

எனவே, பால் விற்பனை விலை உயர்வை பழனிச்சாமி அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்’ என்றார். தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் விஎம்எஸ்.

முஸ்தபா: அண்மையில் ஆவின் பால் நிறுவனத்தில் நடைபெற்ற கோடிக்கணக்கான ஊழலை மறைத்து விட்டு, அந்த ஊழல் காரணமாக ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட பாலின் விற்பனை விலையை ஒரே நேரத்தில் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 6 உயர்த்தி, சாதாரண மக்கள் தலையில் அந்த சுமையை ஏற்றியிருப்பதை கண்டிக்கிறேன்.

இந்த விற்பனை விலை உயர்வினை உடனடியாக திரும்ப பெற வேண்டும். இந்த நிலையில், ஆவின் பால் விலையை உயர்த்தும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது குறித்து எம்ஜிஆர் நகரை சேர்ந்த இல்லத்தரசி வசந்தி (35) கூறுகையில், ‘‘ஒவ்வொரு வீட்டுக்கும் பால் அத்தியாவசியமானது. யாரும் பால் உபயோகப்படுத்தாமல் இருக்க முடியாது.

அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பால் விலையை திடீரென இப்போது ரூ. 6 வரை உயர்த்தி இருக்கிறார்கள். இதனால் ஒரு மாதத்திற்கு ரூ. 360 வரை செலவு கூடுதலாகிறது.

இதுவே வருடத்திற்கு ரூ. 4,800க்கு மேல் அதிகமாகிறது. இது நடுத்தர, சாமானிய மக்கள் தலையில் விழுந்த இடி.

இந்த விலை உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும்’’ என்றார்.

நெற்குன்றம் சிடிஎன் நகரை சேர்ந்த சசிகலா (33) கூறுகையில், ‘‘அதிமுக ஆட்சியில் பால் விலை உயர்வது இது 3வது முறை. அதிமுக ஆட்சியில் மக்களுக்கு நல்ல திட்டங்கள் கிடைக்கிறதோ இல்லையோ சாதாரண மக்கள் பயன்படுத்தும் பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது.

இந்த பால் விலை உயர்வு எல்லா பொருட்களின் விலை உயர்வுக்கும் அச்சாணியாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. நான் ஒரு நாளைக்கு 2 பாக்கெட் பால் வாங்குகிறேன்.

தனியார் பாலை விட விலை குறைவு என்பதால் ஆவின் பால் வாங்கி பயன்படுத்துகிறோம். தற்போது ஒரே தடவையாக லிட்டருக்கு ரூ. 6 உயர்த்தினால் என்ன செய்வதென்று தெரியவில்லை’ என்றார்.

நெற்குன்றம் அகத்தியர் தெருவை சேர்ந்த வசந்தி:
பால் விலையை லிட்டருக்கு திடீரென ரூ. 6 அரசு உயர்த்தியுள்ளது. இந்த திடீர் விலை உயர்வு பேரிடியாக உள்ளது.



பால் என்பது அத்தியாவசியான ஒன்று. அதற்கான கொள்முதல் விலை அரசு மானியமாக பால் உற்பத்தியாளர்களுக்கு தரலாம்.

அதை விடுத்து அந்த கொள்முதல் விலையை எங்கள் தலையில் போடுவது எந்த விதத்தில் நியாயம். இந்த அரசு மக்கள் நலனை காக்கும் அரசாக இருந்தால் பால் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்.

பால் விலை உயர்வு காரணமாக டீக்கடைகளில் டீ, காபி விலையும் நாளை முதல் அதிரடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மாநகர் பகுதிகளில் உள்ள சாதாரண கடைகளில் கிளாஸ் டீ ரூ10, காபி ரூ12க்கு விற்கப்படுகிறது.

அதேபோல் சிறிய நகரங்கள் மற்றும் கிராம பகுதிகளில் கிளாஸ் டீ ரூ7, காபி ரூ10க்கு விற்கப்படுகிறது. நாளை முதல் மாநகரங்களில் டீ ரூ12க்கும், காபி ரூ15க்கும், கிராமப்புறங்களில் டீ ரூ10க்கும், காபி ரூ12க்கும் விற்பனையாகலாம் என்று கூறப்படுகிறது.



டீ, காபி விலையை எந்தளவு உயர்த்தலாம் என்பது பற்றி டீக்கடை உரிமையாளர் சங்கத்தினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதுபற்றி மதுரவாயலில் டீக்கடை வைத்திருக்கும் வேல்முருகன் கூறுகையில்,  கடந்த 15 வருடமாக டீ கடை வைத்திருக்கிறேன்.

இப்போது தான் அதிகபட்சமாக பால் விலை ரூ. 6 வரை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வால் டீ, காபி விலை தவிர்க்க முடியாததாகி உள்ளது.

இது குறித்து எங்கள் சங்கத்தில் பேசி டீ, காபி விலை உயர்வு குறித்து அறிவிக்கப்படும். ஏனெனில் நாங்கள் ஆவின் பாலைத்தான் பயன்படுத்தி வருகிறோம்.

தனியார் பால் தரமானதாக இருக்காது. விலை உயர்வதால் வாடிக்கையாளர் வருகையும் குறைந்து விடும்’’ என்றார்.

இந்நிலையில், பால் விலை உயர்வு குறித்து அமைச்சர் பாண்டியராஜன் கூறுகையில், ‘‘பால் விலை உயர்வை பொருளாதார நடவடிக்கையாகவே பார்க்க வேண்டும்.

தரமான பாலுக்கு அதிக விலை கொடுக்கலாம்.

இந்த விலை உயர்வை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்’’ என்றார். தயிர், மோர், ஸ்வீட்ஸ் ஐஸ் கிரீம் விலையும் எகிறும் ஆவின் பால் உயர்வை தொடர்ந்து ஆவின் தயாரிக்கும் பால் பொருட்களான தயிர், மோர், லஸ்ஸி மற்றும் இனிப்பு பொருட்களான பால்கோவா, பேரீச்சை பால்கோவா, மைசூர் பா, பால் பேடா, ஐஸ் கிரீம் உள்ளிட்டவைகளின் விலையும் உயரும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

கூட்டுறவு சங்கங்கள் மேலும் நலிவடையும் திருவாரூர் பால் கூட்டுறவு சங்க தலைவர் தட்சிணாமூர்த்தி கூறுகையில், ‘‘ஏற்கனவே ₹26க்கு அரசு பால் கொள்முதல் செய்கிறது. வறட்சி காரணமாக வைக்கோல் உள்ளிட்ட தீவனங்கள் தட்டுப்பாடு நிலவுகிறது.

பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதே தவிர கொள்முதல் விலை உயர்த்தப்படவில்லை.

விலையில்லா மாடுகள் வாங்கிய பயனாளிகள் பாலை, கூட்டுறவு சங்கத்திடம் கொடுக்க வேண்டும் என்று அரசு கூறியது.

அதை யாரும் ேகட்கவில்லை. தனியாரிடம் தான் பாலை கொடுக்கிறார்கள்.

இப்போதும் தனியாரிடமே பாலை அதிகம் கொடுப்பார்கள். இதனால் கூட்டுறவு சங்கங்கள் மேலும் நலிவடையும்’’ என்றார்.

சிறிய நகரங்கள் மற்றும் கிராம பகுதிகளில் கிளாஸ் டீ ரூ7, காபி ரூ10க்கு விற்கப்படுகிறது. நாளை முதல் மாநகரங்களில் டீ ரூ12க்கும், காபி ரூ15க்கும், கிராமப்புறங்களில் டீ ரூ10க்கும், காபி ரூ12க்கும் விற்பனையாகலாம் என்று கூறப்படுகிறது

அதிமுக ஆட்சியில் ரூ22. 50 ஏற்றம்
2011ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபோது, ஒரு லிட்டர் சமன்படுத்திய பால்(நீல நிற கவர்) ரூ20. 50ஆக இருந்தது.

பின்னர் 2011 நவம்பர் 19ம் தேதி லிட்டர் ரூ27 ஆக உயர்த்தி ஜெயலலிதா உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து 2014 நவம்பர் 1ம் தேதி பால் விலையை மேலும் 10 ரூபாய் உயர்த்தி, லிட்டர் 37 ரூபாய்க்கு விற்பனை செய்ய அப்போது முதல்வராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் உத்தரவிட்டார்.

அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு தற்போது 3வது முறையாக பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது ரூ6 உயர்த்தப்பட்டு, லிட்டர் ரூ43க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.

இந்த 8 ஆண்டுகளில் 2 மடங்கிற்கு மேல் அதாவது லிட்டருக்கு ரூ22. 50 உயர்த்தப்பட்டுள்ளது.

.

மூலக்கதை