வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: 14 மாவட்ட மக்கள் மழையால் மகிழ்ச்சி

தமிழ் முரசு  தமிழ் முரசு
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: 14 மாவட்ட மக்கள் மழையால் மகிழ்ச்சி

சென்னை: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்த தென்மேற்கு பருவமழை தாக்கம் காரணமாக தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வந்தது.

இதுதவிர வெப்பசலனம், காற்று மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் மழை பதிவாகி வருகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக சென்னை, வேலூர், சேலம், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இந்த மழை காரணமாக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் அமைந்துள்ள அணை, ஏரிகளின் நீர் மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, தமிழகத்தின் குடிநீர் மற்றும் பாசன தேவைகளை பூர்த்தி செய்யும் 15 முக்கிய அணைகளின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

குறிப்பாக, 198 டிஎம்சி கொள்ளளவு கொண்ட 15 அணைகளில் 135 டிஎம்சியாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை நிலவரப்படி கடலூரில் 12 செ. மீ, தர்மபுரி, . நாகை 3 செமீ,  புதுச்சேரி, சேலம் தலா 5 செ. மீ,  வேலூரில் 16 செ. மீ மழை பதிவாகியுள்ளது.

திருத்தணி, நாமக்கல், மதுரை, காரைக்கால், சென்னை, அதிராமபட்டினம் தலா 2 செ. மீ மழை பதிவாகியுள்ளது. இந்த நிலையில் இன்று காலையும் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

குறிப்பாக, சென்னையில் மயிலாப்பூர், கோயம்பேடு, கோடம்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், முடிச்சூர், சேலையூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது.

இந்த மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் வாகனங்களில் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்னும் 3 நாட்களுக்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் ெதரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் கூறியதாவது: தென்கிழக்கு வங்கக் கடல் முதல் தமிழகம் வரையிலான வளிமண்டல மேலடுக்கில் காற்று சுழற்சி நிலவுகிறது. இதனால் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.   சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

அடுத்த 48 மணிநேரத்துக்கு ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.   அந்தமான் நிக்கோபார் தீவுகளை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில், காற்றின் வேகம் சற்று கூடுதலாக இருக்கும். அப்பகுதியில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

.

மூலக்கதை