வேலூர் மாவட்டத்தில் 3வது நாளாக கனமழை: 200 ஏக்கர் பயிர்கள் சேதம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
வேலூர் மாவட்டத்தில் 3வது நாளாக கனமழை: 200 ஏக்கர் பயிர்கள் சேதம்

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் 3வது நாளாக இன்றும் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக ஆலங்காயத்தில் 15 செ. மீ மழை கொட்டியது.

ஆம்பூரில் 200 ஏக்கர் விளை நிலங்களில் வெள்ளம் புகுந்ததால் பயிர்கள் சேதமாகியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக வேலூர் மாநகரின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியது. வேலூரில் 110 ஆண்டுகளுக்கு பிறகு 16 செ. மீ மழை பதிவானது.   தொடர்ந்து 2வது நாளாக நேற்றும் ஆம்பூர், ஆலங்காயம், திருப்பத்தூர், வாணியம்பாடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை பெய்தது.

ஆம்பூரில் நேற்று நள்ளிரவு முதல் விடிய விடிய தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

விடாமல் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக ஆம்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களில் உள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

ஆம்பூர் அடுத்த மிட்டாளம் கொச்சேரி கானாறு, வெள்ளைக்கல் பகுதியில் உள்ள வெள்ளக்கல் கானாறு ஆகிய இடங்களில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காட்டுக்கொல்லை, நாச்சியார்குப்பம், விண்ணமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200 ஏக்கர் விவசாய நிலங்களில் வெள்ளம் புகுந்தது.

இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலைகளில் முழங்கால் வரை மழைநீர் தேங்கி உள்ளதால், அவ்வழியாக செல்லும் வாகனங்கள் செல்வதில் பாதிப்பு ஏற்பட்டது.



திருப்பத்தூர் அடுத்த ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் நேற்றிரவு பெய்த கன மழையினால் வரலாறு காணாத அளவுக்கு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நீர்வீழ்ச்சிக்கு செல்ல முடியாத அளவில் வெள்ளம் பாய்ந்தோடி வருகிறது.

இதன் அருகே உள்ள விநாயகர் கோயில், பெருமாள் கோயில் அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து இன்று 3வது நாளாக மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

.

மூலக்கதை