அனுமதி! விநாயகர் சிலைகள் நிறுவ... காவல்துறை உதவி

தினமலர்  தினமலர்
அனுமதி! விநாயகர் சிலைகள் நிறுவ... காவல்துறை உதவி

சென்னை : சென்னையில், விநாயகர் சிலைகள் நிறுவ, அனுமதி கோருவதற்கான நடைமுறையை, காவல்துறை எளிமையாக்கியுள்ளது.
சென்னை காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:விநாயகர் சதுார்த்தி, செப்., 2ல் கொண்டாடப்படுகிறது. சென்னை காவல்துறை, விநாயகர் சிலைகள் அனுமதிக்கான நடைமுறையை எளிமையாக்கியுள்ளது.இதற்கு முன், விநாயகர்சிலைகளை நிறுவுபவர்கள், காவல் துறை, தீயணைப்பு, மாநகராட்சி, நகராட்சி, மின் மற்றும் மாசுக்கட்டுப்பாடு வாரியம் ஆகியவற்றிலிருந்து, அனுமதி பெற வேண்டும்.அதன்பின், சிலைகள்வைக்க, அனுமதி வழங்கப்பட்டு வந்தது. இதனால், சிலைகளை நிறுவுபவர்கள், மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

இந்த பிரச்னைகளை தீர்க்கும் வகையில், ஒற்றைச் சாளர முறை என்ற புதிய முறையை, சென்னை காவல்துறை அறிமுகம் செய்துள்ளது.இதன்படி, விநாயகர் சிலைகளை நிறுவுபவர்களோ, அமைப்புகளோ, ஒவ்வொரு துறைக்கும், தனித்தனியே சென்று அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை.ஒவ்வொரு காவல் சரகத்திற்கும், இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில், ஒரு காவல் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். விநாயகர் சிலையை நிறுவுபவர்கள், அந்தந்த காவல் அதிகாரிகளை சந்தித்து, மனு கொடுத்தால் போதும்.அந்த அதிகாரி, அந்த மனுக்களை பெற்று, மற்ற துறைகளிடம் இருந்து பெற வேண்டிய அனுமதியை, அந்தந்த துறைகளிடம் இருந்து, அவரே பெற்று, இறுதியில், விநாயகர் சிலைகள் நிறுவ, அனுமதி வழங்குவார்.

இதனால், விநாயகர் சிலைகள் நிறுவுபவர்களுக்கு, எவ்வித சிரமமோ, தாமதமோ ஏற்படாது. விநாயகர் சிலைகளை நிறுவ இருக்கும் அமைப்புகள், தனி நபர்கள், கட்சிகள், இம்முறையை பின்பற்றி, வரும், 22ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை