காலத்தின் கட்டாயம்! போலீஸ் ஸ்டேஷன்களில் 'சைபர் க்ரைம்' தனிப்பிரிவு

தினமலர்  தினமலர்
காலத்தின் கட்டாயம்! போலீஸ் ஸ்டேஷன்களில் சைபர் க்ரைம் தனிப்பிரிவு

கோவை:அதிகரித்து வரும் சைபர் குற்றங்களை தடுக்க, தொழில்நுட்ப திறமை வாய்ந்தவர்கள் மூலம், போலீஸ் ஸ்டேஷன்களில், 'சைபர் க்ரைம்' தனிப்பிரிவு அமைப்பது காலத்தின் கட்டாயமாகி உள்ளது; தொலைநோக்கு திட்டத்துடன், கோவையில் இப்பிரிவை துவக்க வேண்டியது அவசியம்.நாளுக்கு நாள் தொழில்நுட்பம் வளர்ச்சி பெறுவதற்கு ஏற்ப, 'சைபர்' குற்றங்களும் அதிகரித்து வருகின்றன.
'கிரெடிட்' கார்டு மோசடி, வைரஸ் தாக்குதல், தகவல் திருட்டு, லாட்டரி மோசடி, இணைய தளங்கள் முடக்கம், ரகசிய தகவல்கள் திருட்டு உட்பட பல்வேறு வகையான 'சைபர்' குற்றங்கள் அரங்கேறி வருகின்றன.சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள், கோவை மாநகர், மாவட்ட தலைமை இடத்தில் செயல்படும் 'சைபர் க்ரைம்' தனிப்பிரிவில் புகார் அளிக்கின்றனர். இப்பிரிவில், பெரிய அளவிலான 'சைபர்' குற்றங்களை தவிர்த்து, சிறிய அளவில் நடக்கும் 'சைபர்' குற்றங்களால் பாதிக்கப்படுவர்கள் புகார் அளிப்பதில்லை.இதற்கு தீர்வாக, சட்டம்-ஒழுங்கு, குற்றப்பிரிவு போல், அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும், பிரத்யேக 'சைபர் க்ரைம்' தனிப்பிரிவு துவக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
முன்னாள் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:சைபர் குற்றங்களை கையாளும் தொழில்நுட்ப திறமை வாய்ந்தவர்களை தேர்ந்தெடுத்து, போலீஸ் ஸ்டேஷன்தோறும் 'சைபர் க்ரைம்' தடுப்பு மையம் உருவாக்க வேண்டும். இவர்களுக்கு அனைத்து வகையான சைபர் குற்றங்களை கையாள்வது குறித்து கற்றுத்தர வேண்டும். இவர்களில் திறமையானவர்களை கண்டறிந்து, 'சைபர் க்ரைம்' தனிப்படை அமைக்கலாம்.
தேவையான தொழில்நுட்ப வசதி செய்து தர வேண்டும். அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும் 'சைபர்' தனிப்பிரிவு உருவாகும்போது, சைபர் குற்றங்கள் குறையும். வரும் காலங்களில் சட்டம்-ஒழுங்கு, குற்றப்பிரிவை காட்டிலும், 'சைபர்' குற்றங்களை கையாள்வதில் தான் போலீசாருக்கு அதிக சிரமம் ஏற்படும்.
இதனை முக்கிய பிரச்னையாக கருத்தில் கொண்டு, தொலைநோக்கு பார்வையுடன், போலீஸ் ஸ்டேஷன்களில், 'சைபர் க்ரைம்' தனிப்பிரிவு அமைக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.மாதந்தோறும் 100 புகார்கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நவீன தொழில்நுட்பத்துடன் 'சைபர் லேப்' அமைக்கப்பட்டுள்ளது.
தினமும் குறைந்தது, 3 முதல், 5 புகார்கள் வருகின்றன. மாதந்தோறும், சைபர் குற்றங்கள் தொடர்பாக குறைந்தது,100 புகார்கள் வருகின்றன. இப்புகார்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்து, விசாரணையின்போது கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும். தகவல்களை திரட்டி, 'டிஜிட்டல்' மூறையில் பாதுகாக்க வேண்டும். இவற்றை கருத்தில்கொண்டு, அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும், 'சைபர் க்ரைம்' தனிப்பிரிவை தேவையான தொழில்நுட்ப வசதியுடன் துவக்க வேண்டும்.

மூலக்கதை