தனி ஆளாக அமைச்சரவை கூட்டம் எடியூரப்பாவுக்கு வந்த சோதனை

தினமலர்  தினமலர்
தனி ஆளாக அமைச்சரவை கூட்டம் எடியூரப்பாவுக்கு வந்த சோதனை

பெங்களூரு:கர்நாடக முதல்வராக பதவியேற்றுள்ள, பா.ஜ., மூத்த தலைவர், எடியூரப்பா தலைமையில், கடந்த, 22 நாட்களில், மூன்று முறை அமைச்சரவை கூட்டம் நடந்துள்ளது. ஆனால், அமைச்சர்கள் யாரும் நியமிக்கப்படாததால், அவர் மட்டுமே அதில் கலந்து கொண்டுள்ளார்.கர்நாடகாவின் முதல்வராக, பா.ஜ., மூத்த தலைவர், எடியூரப்பா, கடந்த மாதம், 26ல் பதவியேற்றார். ம.ஜ.த., - காங்.,கைச் சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி துாக்கியதால், முதல்வராக இருந்த குமாரசாமி தலைமையிலான, கூட்டணி அரசு, பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் கவிழ்ந்தது.



இதையடுத்து, எடியூரப்பா தலைமையில், பா.ஜ., அரசு அமைந்தது; சட்டசபையில் பெரும்பான்மையும் நிரூபிக்கப்பட்டது.ஆனால், பதவியேற்று, 22 நாட்களாகியும், இதுவரை அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவில்லை. முதல்வரையும் சேர்த்து, மொத்தம், 33 அமைச்சர்கள் நியமிக்க முடியும்.
இதுவரை, இரண்டு முறை டில்லி சென்று, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ., தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான, அமித் ஷாவை நேரில் சந்தித்து, அமைச்சரவை விரிவாக்கம் குறித்து விவாதிக்க முயன்றார். ஆனால், பார்லிமென்ட் கூட்டத் தொடர், நடந்து கொண்டு இருந்ததால், அந்த சந்திப்பு நடக்கவில்லை.

இதற்கிடையே, கடந்த மாதம், 26, 29 மற்றும் இம்மாதம், 14ம் தேதி என, மூன்று முறை, கர்நாடக அமைச்சரவை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு அழைப்பு விடுத்த, முதல்வர் எடியூரப்பா மட்டுமே, அதில் கலந்து கொண்டார். தலைமைச் செயலர், துறைச் செயலர்கள் பங்கேற்றனர்.

'தற்போது, கர்நாடகாவில், அரசு நிர்வாகம் சிறப்பாக இருப்பதால், அமைச்சர்கள் இல்லாத நிலையிலும், எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை' என, பா.ஜ., மூத்த தலைவர்கள் கூறினர்.இந்த நிலையில், அமைச்சரவை குறித்து முடிவு செய்வதற்காக, எடியூரப்பா, டில்லியில் முகாமிட்டு உள்ளார்.கட்சி மேலிடத் தலைவர்களுடன் நடத்திய ஆலோசனையை அடுத்து, அமைச்சர்கள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சர்கள், வரும், ௨௦ல் பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


மூலக்கதை