நாட்டின் பொருளாதாரத்தை ரூ.700 லட்சம் கோடியாக்க இலக்கு

தினமலர்  தினமலர்
நாட்டின் பொருளாதாரத்தை ரூ.700 லட்சம் கோடியாக்க இலக்கு

புதுடில்லி:வரும், 2025ம் ஆண்டுக்குள், நாட்டின் பொருளாதாரத்தை, 350 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், வரும், 2032க்குள், அதை இரட்டிப்பாக்க வேண்டும் என்ற இலக்கையும், மத்திய அரசு நிர்ணயித்துள்ளது; இதற்கான முயற்சிகள் துவங்கியுள்ளன.

கடந்த, 2016, 2017ம் ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 8 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்தது. ஆனால், இந்த ஆண்டில், சற்று மந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்தாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி கணிப்பை, 7 சதவீதத்தில் இருந்து, 6.9 சதவீதமாக, ரிசர்வ் வங்கி குறைத்து உள்ளது.இந்நிலையில், பொருளாதார வளர்ச்சியை உயர்த்தும் வகையில், மூன்று விதமான திட்டங்களை மத்திய அரசு வகுத்துள்ளது.

உத்தரவு



முதல் திட்டம், உடனடி பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்கள்; இடைக்காலமாக, 2025ம் ஆண்டுக்கான இலக்கு; இறுதியாக, 2032க்கான இலக்கு என, மூன்று காலகட்டங்களுக்கு, தனித் தனியாக திட்டங்கள் வகுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இது குறித்து, மத்திய நிதி அமைச்சக மூத்த அதிகாரிகள் கூறியதாவது:பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், சமீபத்தில், இரண்டு சிறப்பு அமைச்சரவை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

முதலீடு மற்றும் வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில் திறன் மேம்பாடு என்பது தான், அந்த சிறப்பு குழுக்கள்.இவற்றையடுத்து, வரும், 2032ல், 700 லட்சம் கோடி ரூபாயாக பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தற்போதைய நிலையில், பொருளாதார மந்தநிலைக்கு, வங்கிகளில் போதிய பணம் கையிருப்பு இருந்தும், வீட்டுக் கடன், வாகனக் கடன் போன்ற கடன்கள் வாங்குவது குறைந்துள்ளதே முக்கிய காரணம்.

தேவை குறைந்துள்ளதால், ரியல் எஸ்டேட், ஆட்டோமொபைல் துறைகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.இதை மாற்றி அமைக்கும் வகையில், கடன்களுக்கான வட்டி விகிதங்களை, மேலும் குறைப்பது குறித்து, ஆராயப்பட்டு வருகிறது. வீடு வாங்குவோருக்கு அதிக சலுகைகள்; வாகனங்களுக்கான, ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரியை குறைப்பது உள்ளிட்டவை குறித்து ஆராயப்படுகிறது.

முன்னுரிமை



மாசு ஏற்படுத்தாத மின்சார வாகனங்களுக்கு, மத்திய அரசு முன்னுரிமை தருகிறது. அதனால், மின்சார வாகனம் வாங்குவோர், தங்களுடைய பழைய வாகனங்களை ஒப்படைக்கும்போது, அதற்கு உகந்த விலை தருவதுவதற்கான திட்டமும் தயாராகி வருகிறது.இவற்றைத் தவிர, ஒவ்வொரு அமைச்சகத்திடம் இருந்தும், தங்களுடைய அமைச்சகங்களின் வளர்ச்சியை உயர்த்துவது தொடர்பான அறிக்கை பெறப்பட்டு வருகிறது.

சமீபத்தில், சுதந்திர தின உரையின்போதும், '2025க்குள், பொருளாதாரத்தை, 350 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்துவது சாத்தியம்' என, பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். இந்த இலக்கை எட்டுவதுடன், 2032ல், 700 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்துவதற்கான முயற்சியும் துவங்கியுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

மூலக்கதை