பாக்.,ன் போலி முகத்தை அம்பலமாக்கிய எப்ஐஆர்

தினமலர்  தினமலர்
பாக்.,ன் போலி முகத்தை அம்பலமாக்கிய எப்ஐஆர்

குஜ்ரன்வாலா : பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக காட்டிக் கொள்ள போலி எப்ஐஆர்., தயார் செய்து சர்வதேச அமைப்புக்களை பாகிஸ்தான் தவறாக வழி நடத்தி உள்ளது அம்பலமாகி உள்ளது.

பயங்கரவாத செயல்பாடுகளுக்கு பயன்படுத்துவதற்காக தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்கள் இடையே நில ஒப்பந்தம் நடந்ததாகவும், இது தொடர்பாக அந்த அமைப்புக்கள் மீது குஜ்ரன்வாலா போலீஸ் ஸ்டேஷனில் எப்ஐஆர்., பதியப்பட்டுள்ளதாகவும் ஜூலை 1 ம் தேதி பாகிஸ்தான் அறிவித்தது. பயங்கரவாத அமைப்புக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க துவங்கியதால் பாக்., ஐ கறுப்புப் பட்டியலில் இருந்து நீக்கிவிடலாம் என சர்வதேச அமைப்பான நிதி நடவடிக்கை பணிக்குழு சிந்தித்து வருகிறது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அடுத்த வாரம் பாங்காக்கில் நடக்க உள்ளது.

இந்நிலையில் பயங்கரவாத அமைப்புக்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டதாக பாக்., கூறிய எப்ஐஆர்., நகலை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், உண்மையாக பயங்கரவாத செயல்பாடுகளுக்காக நிலங்களை பயன்படுத்தும், மற்றும் பயங்கரவாத அமைப்புக்களுக்கு நிதி திரட்டும் லக்ஷர் இ தொய்பா அமைப்பின் தலைவன் ஹபீஸ் முகம்மது சையது மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகளான அப்துல் ஜாபர், ஹபீஸ் மசூத், அமிர் ஹம்சா, மாலிக் ஜாபர் ஆகியோரின் பெயர்கள் ஏதும் இடம்பெறவில்லை.

எந்த சட்டத்தின் கீழ், எதற்காக, எந்த தகவலின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்படுகிறது என்ற விபரம் ஏதும் எப்ஐஆர்.,ல் குறிப்பிடப்படவில்லை. சிலரின் பெயர்கள் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, அவர்கள் யார், எந்த பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலும் இல்லை. சட்டப்பிரிவுகள் ஏதும் குறிப்பிடாமல் போலியாக எப்ஐஆர்., தயார் செய்யப்பட்டிருப்பது அம்பலமாகி உள்ளது.

மூலக்கதை