கமலின் ஏரியா அரசியல் கட்சிக்கு வெற்றி தருமா

தினமலர்  தினமலர்
கமலின் ஏரியா அரசியல் கட்சிக்கு வெற்றி தருமா

சென்னை, கிராம சபை வாயிலாக அரசியல் பிரவேசத்தை ஆரம்பித்த கமல் 'ஏரியா சபை' வழியாக சட்டசபை தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியை துவக்கி லோக்சபா தேர்தலை சந்தித்த கமல் அடுத்ததாக உள்ளாட்சி மற்றும் தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகிறார்.

அதிகாரம்



இதற்காக கட்சி நிர்வாக வட்டத்தை விரிவுப்படுத்தியுள்ள அவர் 'பொது மக்கள் யாராக இருந் தாலும் கட்சி நிர்வாகிகளை எளிதில் சந்திக்கலாம்' என அறிவித்துள்ளார்.இந்நிலையில் கட்சி ஆரம்பித்த புதிதில் கிராம சபை கூட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி தமிழகம் முழுக்க ஒவ்வொரு கிராமத்திலும் நேரடியாக களமிறங்கி மக்களை கவர்ந்தார். தற்போது அதே பாணியில் ஏரியா சபை கூட்டங்கள் நடத்த தயாராகி வருகிறார் கமல்.

சுதந்திர தினவிழா அன்று தன் கட்சி அலுவலகத்தில் மாதிரி ஏரியா சபை கூட்டத்தையும் கமல் நடத்தினார்.கர்நாடகா கேரளா மேற்கு வங்கத்தில் ஏரியா சபை கூட்டம் நடைமுறையில் இருப்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர் 'கிராம மக்களுக்கு அதிகாரம் தருவதை போல் நகர மக்களுக்கும் அதிகாரம் தர ஏரியா சபை கூட்டத்தை நடத்த வேண்டும்' என கோரி உள்ளார்.

விழிப்புணர்வு



இதற்கான சட்ட திருத்தம் 2010ம் ஆண்டிலேயே இயற்றப்பட்டது என்பதையும் கமல் மேற்கோள் காட்டியுள்ளார்.சுதந்திர தினத்தை அடுத்து அக். 2ம் தேதி கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. அப்போது ஏரியா சபை குறித்த விழிப்புணர்வை நகர்ப்புறங்களில் ஏற்படுத்த கமல் திட்டமிட்டு உள்ளார்.

மூலக்கதை