காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்னையாக்கும் பாக். முயற்சி தோல்வி; சீனாவுக்கும் ஏமாற்றம்

தினகரன்  தினகரன்
காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்னையாக்கும் பாக். முயற்சி தோல்வி; சீனாவுக்கும் ஏமாற்றம்

ஐநா: ஐநா  பாதுகாப்பு கவுன்சிலின் ஆலோசனைக் கூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச  பிரச்னையாக்க முயன்ற பாகிஸ்தானின் முயற்சிகள் தோல்வியில் முடிந்தது.  அதேபோன்று, சீனாவுக்கும் இவ்விவகாரத்தில் ஏமாற்றமே எஞ்சியது. எந்த முடிவும் எடுக்கப்படாமல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. காஷ்மீர்  சிறப்பு அந்தஸ்த்தை இந்தியா ரத்து செய்ததற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு  தெரிவித்தது. இதனை சர்வதேச பிரச்னையாக்க நினைத்த பாகிஸ்தான், இந்த  விவகாரத்தை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் எழுப்ப வேண்டும் என்று சீன  வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்கிடம் வேண்டுகோள் விடுத்தது. இதைத் தொடர்ந்து, ஐநா பாதுகாப்பு கவுன்சிலை கூட்ட வேண்டுமென்று அதன் தலைவரும் போலந்துக்கான ஐநா  தூதருமான ஜோனா ரோனெக்காவுக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் மகமூத் குரேஷி  கடிதம் எழுதினார். இது தொடர்பாக அதிகாரப்பூர்வமற்ற வகையில்  பூட்டிய அறைக்குள் ஆலோசனை நடத்த ஐநா.வில் முடிவு செய்யப்பட்டது. இதன்படி நேற்று முன்தினம் கூட்டம் நடந்தது.கூட்டம் முடிந்த பின் சீனாவுக்கான ஐநா தூதர் ஜாங் உன், பாகிஸ்தானுக்கான  ஐநா தூதர் மலீகா லோதியும் பத்திரிகையாளர்களை சந்திக்காமல் வெளியேறினர். இந்த கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக ஐநா தூதரக வட்டாரங்கள் கூறுகையில், `கினியா, டொமினிக்கன்  குடியரசு, ஜெர்மனி, அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட பெரும்பாலான  உறுப்பினர் நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்தன. இப்பிரச்னைக்கு  இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்தை மூலம் தீர்வு காண வேண்டும். விவாதத்தின்போது பாகிஸ்தானின் அனைத்து கூற்றுகளையும் இந்தியா தவிடு பொடியாக்கியது.  அரசியலமைப்புக்கு உட்பட்டு 370வது சட்டப்பிரிவை ரத்து செய்தது எப்படி  சமாதானத்துக்கும் அமைதிக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும்  என இந்தியா கேள்வி எழுப்பியது. இதனால் காஷ்மீரை சர்வதேச பிரச்னையாக்கும்  பாகிஸ்தானின் முயற்சி தோல்வி அடைந்தது. சீனாவுக்கும் ஏமாற்றமே  மிஞ்சியது’’ என்று தெரிவித்தன.  ரகசிய ஆலோசனையை தொடர்ந்து  செய்தியாளர்களை சந்தித்த ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி சையத்  அக்பருதீன், ``பெரும்பாலான நாடுகள் காஷ்மீர் பிரச்னை  இரு நாடுகளுக்கு இடையிலானது. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அறிவுறுத்தின. ஐநா பாதுகாப்பு கவுன்சில் விதிப்படி உறுப்பினர்  நாடுகள் எந்தவொரு பிரச்னை குறித்தும் ஆலோசிக்கலாம். ஆனால் அது குறித்த  முடிவோ, அறிக்கையோ வெளியாகாது. மத்திய அரசின் முடிவு எல்லைக் கடந்த நாட்டை  எப்படி பாதிக்க முடியும்? சிம்லா ஒப்பந்தத்தின் அடிப்படையில் காஷ்மீர்  பிரச்னைக்கு தீர்வு காண இந்தியா தயாராக உள்ளது’’ என்று கூறினார்.

மூலக்கதை