இதுவரை 1.5 கோடி பேர் தரிசனம்: அத்திவரதரை அனந்தசரஸ் குளத்தில் ஆகமவிதிப்படி வைக்க தீவிர ஏற்பாடு

தமிழ் முரசு  தமிழ் முரசு
இதுவரை 1.5 கோடி பேர் தரிசனம்: அத்திவரதரை அனந்தசரஸ் குளத்தில் ஆகமவிதிப்படி வைக்க தீவிர ஏற்பாடு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் வைபவம் கடந்த ஜூலை 1ம் தேதி தொடங்கியது.    ஜூலை 31ம் தேதி வரை சயன கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நிறைவுநாளான நேற்று வரை நின்ற கோலத்தில் அருள்பாலித்தார்.

இந்த வைபவம் தொடங்கிய நாளில் இருந்து உள்ளூர், வெளியூர், வெளிமாநிலம் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் ஆர்வத்துடன் அத்தி வரதரை தரிசனம் செய்தனர். நேற்றுவரை 1. 5 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்துள்ளனர்.

வைபவம் முடிந்துவிட்டதால் மீண்டும் 40 ஆண்டுகளுக்கு பிறகுதான் பக்தர்களுக்கு காட்சி கொடுக்க வெளியே வருவார்.

இந்த நிலையில் வரதராஜபெருமாள் கோயிலில் உள்ள அனந்த சரஸ் குள தண்ணீரில் அத்திவரதரை வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அத்திவரதர் சிலை வைக்கப்படும் அனந்தசரஸ் குளம் எல் அண்டு டி நிறுவனத்தால் தயார் செய்யப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

அத்தி வரதர் வைக்கப்படும் மண்டபத்துக்கு செல்லும் வழி சீரமைக்கப்பட்டு அனந்த சரஸ் குளத்தில் உள்ள நீராழி மண்டபம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கலெக்டர் பொன்னையா கூறியதாவது; அனந்த சரஸ் குளத்தில் உள்ள நீராழி மண்டபத்தில் 9 படிக்கட்டுகள் கீழிறங்கும் நிலையில் உள்ளன. அதற்கு கீழ் செங்கற்கள் பதிக்கப்பட்டு கல்திவான் அமைக்கப்பட்டுள்ளது.

மேற்கு பக்கம் தலை வைத்தபடி, கிழக்கு திசையில் கால் உள்ள அமைப்பில் சயன நிலையில் அத்தி வரதர் வைக்கப்படுவார். தலைப்பகுதியில் பாம்பு வடிவிலான ஆதிசேஷன் சிலை உள்ளது.

பக்கவாட்டில் நாகபாஷண சிலைகள் 16 உள்ளன. ஆகமவிதிபடி இன்று காலையில் இருந்து 3 மணி நேரத்துக்கு ஒருமுறை அத்திவரதருக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.



இட்லி, பொங்கல், தோசை என அத்திவரதருக்கு படைக்கப்பட்டு  சிறப்பு யாகமும் செய்யப்பட்டது. வெட்டிவேர், பச்சை கற்பூரத்தில்  மகா தீபாராதனை செய்யப்பட்டது.

மாலை அல்லது இரவு அத்திவரதர் அனந்த சரஸ் குளத்தில் வைக்கப்படுவார். ஆகம விதிப்படி அத்தி வரதரை குளத்தில் இருந்து எடுப்பதையும், குளத்தில் வைப்பதையும் ஒளிப்பதிவு செய்ய அனுமதி கிடையாது.

இவ்வாறு கூறினார்.

.

மூலக்கதை