ஆக்கிரமிப்பு! ரூ.7 கோடி மதிப்பு குட்டை புறம்போக்கு நிலம்...மீட்க நடவடிக்கை எடுப்பாரா காஞ்சி கலெக்டர்?

தினமலர்  தினமலர்
ஆக்கிரமிப்பு! ரூ.7 கோடி மதிப்பு குட்டை புறம்போக்கு நிலம்...மீட்க நடவடிக்கை எடுப்பாரா காஞ்சி கலெக்டர்?

சென்னை : -தாம்பரம் அடுத்த பெருங்களத்துாரில், 7 கோடி ரூபாய் மதிப்பிலான, குட்டை புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ள நிலையில், அதை மீட்க, நலச்சங்க நிர்வாகிகள் போராடி வருகின்றனர்.

ஆனால், பேரூராட்சி, வருவாய் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள், இடத்தை மீட்க அக்கறை செலுத்தவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தாம்பரம் அடுத்த பெருங்களத்துார் பேரூராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. இங்கு, 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். பேரூராட்சிக்குட்பட்ட, 15வது வார்டில், வீரலட்சுமி நகர், சுந்தர் நகர், சொர்க்கம் அவென்யூ, மூவேந்தர் நகர், மூவேந்தர் நகர் விரிவு ஆகிய பகுதிகளின், மழைநீர் வடிந்து, அடையாறு கிளை கால்வாய்க்கு செல்லும் வகையில், குட்டை ஒன்று இருந்தது.மக்கள் அவதிகடந்த, 20 ஆண்டுகளுக்கு முன் வரை, இப்பகுதியில், 100 ஏக்கரில், விவசாயம் நடந்தது.

அப்போது, இந்த குட்டையை, பாசன கால்வாயாக, பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். இதில் இருந்து செல்லும் நீர், அருகில் உள்ள, அடையாறு கிளை கால்வாய்க்கு சென்றடையும். நகரமயமாக்கலால், இங்குள்ள விவசாய நிலங்கள், வீட்டுமனைகளாக மாற்றப்பட்டன. அதில், குட்டையும் துார்க்கப்பட்டு, நாளடைவில், வீடுகள், தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனம், விநாயகர் கோவில் என, ஆக்கிரமிப்புகள் ஏகபோகமாக முளைத்தன. இதனால், 2015ல், குறிப்பிட்ட இந்த பகுதிகளில், 11 அடி உயரம் வரை தண்ணீர் தேங்கியது. ஒரு வாரம் வரை, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் அவதியடைந்தனர்.

அதன் பின், குட்டையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி, பேரூராட்சி, வருவாய் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அவர்கள், நடவடிக்கை எடுக்கவில்லை.அதனால், ஒவ்வொரு ஆண்டும், லேசான மழை பெய்தாலே, இந்த பகுதிகளில், 3 -- 5 அடி வரை நீர் தேங்கி, குளம்போல் காட்சி அளிக்கிறது.இது குறித்து, அப்பகுதியைச் சேர்ந்த, வீரலட்சுமி நகர், சுந்தர் நகர், மூவேந்தர் நகர் மற்றும் சொர்க்கம் அவென்யூ பகுதிகளின், குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கூறியதாவது:குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனம், அனுமதி பெற்றதை விட, பல மடங்கு அளவிற்கு, நிலத்தடி நீரை உறிஞ்சி வருகிறது.

2016ல், 'சீல்'நிறுவனத்தின் மீது புகார் அளித்து, ஜனாதிபதி அலுவலகத்திற்கு, கடிதம் அனுப்பினோம். 2016 டிசம்பரில், நிறுவனத்திற்கு, அதிகாரிகள், 'சீல்' வைத்தனர். பின், 2017ல் திறக்கப்பட்டது.மத்திய உணவு கட்டுப்பாட்டு வாரிய அனுமதி பெற்று, நிறுவனம் திறக்கப்பட்டதாக, பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.கேள்விமாவட்ட கலெக்டரிடம், புகார் அளித்தோம். அவர், சம்பந்தப்பட்ட நிறுவனத்தை மூடக்கோரி, பேரூராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.அவர்கள், நிறுவனத்தை மூடிவிட்டதாக, கலெக்டருக்கு தவறான அறிக்கையை அளித்தனர்.

குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனம் குறித்து, மத்திய உணவு கட்டுப்பாட்டு வாரியத்திடம், தகவல் அறியும் உரிமை சட்டத்தில், கேள்வி எழுப்பிய போது, 'எங்களிடம், அந்நிறுவனம் செயல்பட அனுமதி வழங்கியதற்கான சான்றிதழ்கள் ஏதும் இல்லை' என, பதில் கிடைத்தது.நடவடிக்கை இல்லைமேலும், குட்டையின் நீர்வழித்தட பகுதிகள், தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. சர்வே எண், 341/2-ஐ வைத்து, ஓய்வு பெற்ற நில அளவையர் வாயிலாக, சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்தோம்.அதில், ஒரு ஏக்கர் பரப்பிற்கு, குட்டை ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது தெரிந்தது. இதன் சந்தை மதிப்பு, 7 கோடி ரூபாயாகும்.

மாவட்ட கலெக்டருக்கு, ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி, மீண்டும் புகார் அளித்தோம். அதற்கு, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விரைவில், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.போட்டு கொடுத்தாரா அதிகாரி?குட்டை ஆக்கிரமிப்பு தொடர்பாக, வீரலட்சுமி நகர், சுந்தர் நகர், மூவேந்தர் நகர் மற்றும் சொர்க்கம் அவென்யூ பகுதிகளின், குடியிருப்போர் நலச்சங்கத்தினர், அதை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும், பொதுப்பணித் துறையின், படப்பை பாசனப் பிரிவு, உதவி பொறியாளர், குஜராஜிடம் புகார் அளித்தனர்.

அடுத்த சில மணிநேரங்களில், ஆக்கிரமிப்பில் சம்பந்தப்பட்ட, தி.மு.க., புள்ளி ஒருவர், தன் ஆதரவாளர்களுடன், புகார் அளித்தவர்களை சந்தித்து மிரட்டி உள்ளார். இதனால், பொதுப்பணித் துறை அதிகாரி, இந்த விஷயத்தில், ஆக்கிரமிப்பாளர்கள் பக்கம் உள்ளாரோ என, நலச்சங்க நிர்வாகிகள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

மூலக்கதை