குற்றச்சாட்டு! காப்பீடு பயிர்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை என விவசாயிகள் ... குடிமராமத்தில் அரசியல் தலையீடு இருப்பதாகவும் சாடல்

தினமலர்  தினமலர்

மதுரை : 'காப்பீடு செய்த பயிர்களுக்கு இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை. குடிமராமத்து பணிகளில் அரசியல் தலையீடு இருக்கிறது. உண்மையான விவசாயிகள் குழுக்கள் மூலம் குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்,' என, மதுரையில் நடந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

கலெக்டர் ராஜசேகர் தலைமை வகித்தார். வேளாண் இணை இயக்குனர் (பொறுப்பு) விவேகானந்தன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) தனலட்சுமி, தோட்டக்கலை துணை இயக்குனர் பூபதி, உதவி இயக்குனர் கலைச்செல்வன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ராஜேஷ், மத்திய கூட்டுறவு வங்கி தனி அலுவலர் தீபாசங்கரி, பொதுப்பணித்துறை பெரியாறு, வைகை நீர்வள ஆதார செயற்பொறியாளர் சுப்பிரமணியன், ஊராட்சிகளுக்கான உதவி இயக்குனர் செல்லத்துரை பங்கேற்றனர்.

இதில் நடந்த விவாதம்: பாண்டியன்: பேரையூர் தாலுகாவில் காப்பீடு செய்த பயிர்கள் சேதமுற்றதற்கு இதுவரை நிவாரணம் வழங்கவில்லை. தனிக்கொடி: உசிலம்பட்டி தாலுகாவில் ஒரு விவசாயிக்கு மட்டுமே நிவாரணம் கிடைத்துள்ளது. சில காப்பீடு நிவாரணத்தை கடனுக்காக பிடித்தம் செய்கின்றனர். வேளாண் அதிகாரி: தனியார் ஏஜன்ட் மூலம் காப்பீடு செய்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து இன்சூரன்ஸ் நிறுவனத்தினருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

மணிகண்டன்: மாவட்டத்தில் 135 கண்மாய்களில் குடிமராமத்து பணி நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 58 கிராம கால்வாய் திட்டத்தில் பயன்பெறும் கண்மாய்களை சேர்க்க வேண்டும். குடிமராமத்து கண்மாய்களின் பரப்பு, நீர் பிடிப்பு பகுதி, பாசன பரப்பு குறித்த தகவல் பலகை வைக்க வேண்டும். அழகு: கண்மாய் குடிமராமத்து மதிப்பீடு குறித்து விவசாயிகளுக்கு நகல் வழங்க வேண்டும். கலெக்டர்: 29 கண்மாய்களில் தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது. மற்ற கண்மாய்களிலும் வைக்கப்படும்.

ராமர்: உசிலம்பட்டி தாலுகா முதலைக்குளம், கருகபிள்ளை, வாலாந்துார், கோவிலாங்குளம், ஜோதிமாணிக்கம் கண்மாய்களில் குடிமராமத்து பணி நடக்கிறது. அதில் எடுக்கப்படும் வண்டல் மண்ணை அந்தந்த ஆயக்கட்டுதாரர்கள் எடுக்க அனுமதிக்க வேண்டும்.

கலெக்டர்: அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.கர்ணன்: செல்லம்பட்டி ஒன்றியம் பூலாங்குளம் கண்மாய் குடிமராமத்து குழு அமைப்பதில் அரசியல் தலையீட்டால் இரு குழுக்கள் அமைக்கப்பட்டன. உண்மையான ஆயக்கட்டுதாரர்கள் இடம்பெறவில்லை. இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.செயற்பொறியாளர்: நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் உத்தரவு வந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும்.பாண்டியன்: சாத்தங்குடி கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு வர கால்வாய்களை துார் வார வேண்டும்.செயற்பொறியாளர்: அணைகளில் நீர் இருப்பை பொறுத்து முடிவு செய்ய இயலும்.திருப்பதி: கண்மாய் குடிமராமத்து பணிகளில் எம்.எல்.ஏ.,க்கள் கூறுவதை கேட்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. குடிமராமத்து பணிகளை மேம்போக்காக மேற்கொள்கின்றனர்.முருகன்: ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் குடிமராமத்து பணி செய்கின்றனர். தென்கரை கண்மாய் நீர் பிடிப்பு பகுதிகளை ஆக்கிரமித்துள்ளனர். அருகிலுள்ள பட்டா இடங்களில் பெற்ற மின் இணைப்பை காட்டி ஆக்கிரமிப்பாளர்களும் மின் இணைப்பு பெற்று விடுகின்றனர்.கலெக்டர்: மின் வாரிய அதிகாரிகள் வருவாய்த்துறையினருடன் இணைந்து ஆய்வு செய்து ஆக்கிரமிப்பில் மின் இணைப்பு வழங்கப்பட்டிருந்தால் துண்டிக்கலாம்.பாண்டியன்: மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. தனியார் நிறுவன காபி கம்பெனிக்கு வைகை அணையிலிருந்து வருவாயை குறிக்கோளாக கொண்டு தண்ணீர் வழங்கப்படுகிறது.கலெக்டர்: குடிநீர் பற்றாக்குறை காலங்களில் வழங்க முடியாது என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதா என பொதுப்பணித்துறையினர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கலாம்.மணவாளக்கண்ணன்: செல்லம்பட்டி ஒன்றியத்தில் 155 விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திருந்தனர். மூவருக்கு மட்டுமே நிவாரணம் கிடைத்துள்ளது. ஆறு மாதங்களாக இன்சூரன்ஸ் நிறுவனத்தினரிடம் பேசியும் நிவாரணம் கிடைக்கவில்லை.வேளாண் அதிகாரி: இம்மாத இறுதிக்குள் நிவாரணம் வழங்கப்படும்.ரவி: அரவை செய்த கரும்புக்குரிய பாக்கியை வழங்காததால் விவசாயிகள் அவதிக்குள்ளாகின்றனர்.சர்க்கரை ஆலை அதிகாரி: சர்க்கரைத்துறை கமிஷனருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்தும் பாக்கி வழங்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது. வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் நலத்திட்டங்கள் மற்றும் உழவர் அடையாள அட்டைகளை கலெக்டர் வழங்கினார். வங்கி தலைவர் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மூலக்கதை