ஊர் கூடி தூர்வார...குடிமராமத்து பணி ஒருங்கிணைப்பு:தொழில் துறையினருடன் ஆலோசனை

தினமலர்  தினமலர்
ஊர் கூடி தூர்வார...குடிமராமத்து பணி ஒருங்கிணைப்பு:தொழில் துறையினருடன் ஆலோசனை

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி பகுதியில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள, தொழிற் துறையினர் ஒத்துழைக்க மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.மாநகராட்சி எல்லையில், நஞ்சராயன் குளம், ஆண்டிபாளையம் குளம் உள்ளிட்ட குளங்கள், நொய்யல் ஆறு மற்றும் சில ஓடைகளும் உள்ளன.
குடிமராமத்து பணி திட்டத்தின் கீழ் இவற்றில் பணி மேற்கொள்வது குறித்து நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம், நடந்தது.மாநகராட்சி கமிஷனர் சிவகுமார் தலைமை வகித்தார். ஏற்றுமதியாளர் சங்கம், சைமா, ஸ்ரீபுரம் டிரஸ்ட், வெற்றி அமைப்பு, ஜீவநதி நொய்யல் பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர்.
மாநகராட்சி பகுதியில் குடிமராமத்து பணி மேற்கொள்ள வேண்டிய இடங்கள் குறித்து மாநகராட்சி சார்பில் விளக்கப்பட்டு, இதில் தொழில் மற்றும் தன்னார்வ அமைப்புகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது.முக்கியமாக நீர்நிலைகளில் துார் வாருதல், தண்ணீர் சேகரிப்புக்கு வழி ஏற்படுத்துதல், மழைக்காலத்தில், பள்ளி, கல்லுாரி வளாகத்தில் நீர் தேங்காமலும், அவற்றை பயனுள்ள வகையில், வீணாக்காமல் பயன்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.கூட்டத்தில் பேசிய அமைப்பு பிரதிநிதிகள், 'திருப்பூரில், ஆண்டிபாளையம் குளம், மாணிக்காபுரம் குளம், நொய்யல் ஆறு உள்ளிட்டவற்றில் தொழில் அமைப்புகள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.நீர் நிலைகள் பாதுகாப்புக்கு ஒதுக்கப்படும் அரசு நிதி எவ்வளவு, தொகுதி வளர்ச்சி நிதி எவ்வளவு, செலவிட்டது எவ்வளவு, என எந்த விவரமும் இல்லை.சீரமைப்பு செய்யப்பட்ட நீர்நிலைகளை தொடர்ந்து நிர்வாகம் முறையாகப் பராமரிக்காமல் உள்ளது. நஞ்சராயன் குளம் துார் வாரப்பட்டது;
ஆனால் அதன் நீர் வழிப்பாதை சீரமைக்கப்படவில்லை,' என்றனர்.நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் உள்ள முன்னாள் மாணவர் அமைப்புகளை அணுகி குடிமராமத்து பணிகள் குறித்து விளக்கி, பங்கேற்க வைப்பது. அனைத்து தொழில் அமைப்புகளிலும் தலா இரு பிரதிநிதிகள் தேர்வு செய்து, மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் சார்பில் தலா இரு அதிகாரிகள் அடங்கிய கமிட்டி ஏற்படுத்துவது.இக்கமிட்டி மூலம், பணிகள் தேர்வு செய்து, பணி மேற்கொள்ளும் முறை உள்ளிட்டவை இறுதி செய்து மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

மூலக்கதை