இந்திய அணி தலைமை பயிற்சியாளராக மீண்டும் ரவி சாஸ்திரி தேர்வு : 2021 வரை நீடிப்பார்

தினகரன்  தினகரன்
இந்திய அணி தலைமை பயிற்சியாளராக மீண்டும் ரவி சாஸ்திரி தேர்வு : 2021 வரை நீடிப்பார்

மும்பை: இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2017ம் ஆண்டு தலைமை பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற ரவி சாஸ்திரியின் (57 வயது) பதவிக் காலம், இங்கிலாந்தில் நடந்த ஐசிசி உலக கோப்பை தொடருடன் முடிவுக்கு வந்தது. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு இடைக்கால பயிற்சியாளராக அவர் நீடித்த நிலையில், புதிய தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்ய விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம், ரவி சாஸ்திரியின் பெயரும் பரிசீலிக்கப்படும் என்று  பிசிசிஐ அறிவித்தது. இதைத் தொடர்ந்து இந்தியா மற்றும் வெளி நாடுகளை சேர்ந்த முன்னாள் நட்சத்திர வீரர்கள், பயிற்சியாளர்கள் பலர் விண்ணப்பித்தனர். இவர்களில் இருந்து ரவி சாஸ்திரி, லால்சந்த் ராஜ்புத், ராபின் சிங், மைக் ஹெஸ்ஸான் (நியூசி.), டாம் மூடி (ஆஸி.), பில் சிம்மன்ஸ் (வெ.இண்டீஸ்) ஆகியோர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். இவர்களில் சிம்மன்ஸ் கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகிக் கொண்டார். கபில்தேவ் தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனைக் குழுவினர் தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்தனர். ரவி சாஸ்திரியே மீண்டும் தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டார். அவர் 2021ல் இந்தியாவில் நடைபெற உள்ள ஐசிசி டி20 உலக கோப்பை தொடர் வரை இந்த பதவியில் நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.நேர்காணல் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கபில்தேவ் கூறுகையில், ‘விண்ணப்பம் செய்த அனைவருமே மிகத் திறமையானவர்கள் தான். ஒவ்வொருவரும் தங்களைப் பற்றிய சுயவிவரங்களை சமர்ப்பித்த விதம், அவர்களின் அனுபவம், அணியின் எதிர்காலத்துக்கான திட்டங்கள் உட்பட அனைத்து அம்சங்களையும் அலசி ஆராய்ந்து இறுதி முடிவு எடுத்தோம். வீரர்களுடன் நட்பான அணுகுமுறை, தகவல் பரிமாற்றத்தில் திறமையான செயல்பாடு, கிரிக்கெட் தொடர்பான அனைத்து விஷயங்களிலும் தெளிவான புரிதல் போன்றவை அடிப்படையில் சாஸ்திரி அதிக மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்தார். மைக் ஹெஸ்ஸான் 2வது இடமும், டாம் மூடி 3வது இடமும் பிடித்தனர். சாஸ்திரியே பயிற்சியாளராக தொடர வேண்டும் என்ற கேப்டன் கோஹ்லியின் கோரிக்கை இந்த தேர்வில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை’ என்றார். சாஸ்திரி பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற பின்னர் இந்தியா விளையாடிய 21 டெஸ்டில் 13 வெற்றி, 60 ஒருநாள் போட்டியில் 43 வெற்றி மற்றும் 36 டி20 போட்டியில் 25 வெற்றி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 அணியாகவும் முத்திரை பதித்துள்ளது.

மூலக்கதை