தேசமே சுவாசம்! சுதந்திர தின விழா கோலாகலம்: தேசப்பற்றை பறைசாற்றிய விழா

தினமலர்  தினமலர்
தேசமே சுவாசம்! சுதந்திர தின விழா கோலாகலம்: தேசப்பற்றை பறைசாற்றிய விழா

திருப்பூர்:திருப்பூர் சிக்கண்ணா கல்லுாரியில் நடந்த சுதந்திர தினவிழாவில், சீருடை பணியாளர்களின் மிடுக்கான அணிவகுப்பு பார்வையாளர்களை கவர்ந்தது.திருப்பூர் மாவட்ட வருவாய்த்துறை சார்பில், 73வது சுதந்திர தினவிழா, சிக்கண்ணா கலை அறிவியல் கல்லுாரி மைதானத்தில், நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார், துணை கமிஷனர் உமா, எஸ்.பி., கயல்விழி, துணை கமிஷனர் உள்ளிட்டோர் வருகையின் போது, பேண்டு வாத்திய குழுவினர் வரவேற்பு அளித்தனர்.காலை, 9:04 மணிக்கு, கலெக்டர் பழனிசாமி, தேசியக்கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார். எஸ்.பி., யுடன், போலீஸ் அணிவகுப்பை பார்வையிட்டார்.
அணிவகுப்பு மரியாதைதொடர்ந்து, சீருடை பணியாளரின் அணிவகுப்பு மரியாதை நிகழ்ச்சி துவங்கியது. ஊர்க்காவல் படை'பேண்டு' வாத்திய குழு முன்னே செல்ல, சிறப்பு ஆயுதப்படை, மாவட்ட போலீஸ், மாநகர போலீஸ், தீயணைப்புத்துறை வீரர்கள், 'டிராபிக்' போலீசார், தேசிய மணவர் படை வீரர்கள், மிடுக்காக அணிவகுத்து சென்று, கலெக்டருக்கு மரியாதை செலுத்தினர்.
சமாதானத்தை வலியுறுத்தி, வெள்ளை சமாதான புறாக்கள் பறக்கவிடப்பட்டன. நாட்டுப்பற்றை பறைசாற்றும் வகையில், காவி, வெள்ளை, பச்சை மற்றும் ஊதா நிற, வண்ண பலுான்கள் வானில் பறக்கவிடப்பட்டன. சில பலுான்கள், கம்பத்தில் சிக்கி, சில விநாடிகள் தேசியக்கொடியுடன் விளையாடிவிட்டு, காற்றில் பறந்து சென்றன.போலீசாருக்கு விருதுசுதந்திர போராட்ட தியாகிகள் குடும்பத்தை சேர்ந்த, 45 பேர், பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டனர்.

துணி பையில் வைத்திருந்த நினைவு பரிசு வழங்கப்பட்டது. திருப்பூர் மாநகர போலீசை சேர்ந்த, 12 பேர்; மாவட்ட போலீஸ் பிரிவை சேர்ந்த 33; தீயணைப்புத்துறையில் 10; என, 55 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.தேர்தல் பிரிவு தாசில்தார் முருகதாஸ், திருப்பூர் வடக்கு தாசில்தார் ஜெயக்குமார், உட்பட 84 அரசுத்துறை அதிகாரிகள், அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
சிறந்த சமூக சேவையை பாராட்டி, நல்லுார் நுகர்வோர் மன்ற தலைவர் சண்முகசுந்தரத்துக்கும், கலெக்டர் பாராட்டு சான்று வழங்கினார். 221 பயனாளிகளுக்கு, 56.52 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.மோப்ப நாய் சாகசம்மாவட்ட போலீஸ் பிரிவில் வளர்க்கப்படும், ஐந்து மோப்ப நாய்களின் சாகசம், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. தவறிய பொருட்களை கண்டுபிடித்து மீட்டு எடுத்தது; 'மொபைல்' போனை நுகர்ந்து பார்த்து, கூட்டத்தில் இருந்த அதன் உரிமையாளரை கண்டுபிடித்தது;மறைத்து வைத்த வெடிபொருளை கண்டறிந்தது; தீ எரியும் வளையத்திற்குள் புகுந்து சென்று, வீசிய பொருளை எடுத்து வந்தது, போன்ற சாதனைகளை செய்து அசத்தின.

முன்னதாக, 'புல்லட்' என்ற பெயர் கொண்ட நாய், மலர்க்கொத்தை எடுத்துசென்று, மேடையில் இருந்தவர்களுக்கு வணக்கம் கூறியது அனைவரையும் கவர்ந்தது.மலைக்க வைத்த'மல்லர் கம்பம்'திருப்பூர் வீரபாண்டி பிரிவு, விரிக் ஷா இன்டர்நேஷனல் பள்ளியை சேர்ந்த, 50 மாணவ, மாணவியர், 'மல்லர்' கம்பத்தில் தாவிக்குதித்து ஏறியும், இறங்கியும், உடம்பை வில்லாக வளைத்தபடி, மல்லர் கம்பத்தில் அமர்ந்தும், சாகசம் புரிந்தனர்.

மூலக்கதை