வேலூர் மாவட்டம் 3 ஆக பிரிப்பு: தேசிய கொடி ஏற்றி முதல்வர் எடப்பாடி அறிவித்தார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
வேலூர் மாவட்டம் 3 ஆக பிரிப்பு: தேசிய கொடி ஏற்றி முதல்வர் எடப்பாடி அறிவித்தார்

சென்னை: வேலூர் மாவட்டத்தை 3 ஆக பிரித்து முதல்வர் அறிவித்துள்ளார். சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த 73வது சுதந்திர தின விழாவில், தேசிய கொடியை ஏற்றி வைத்தபின், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
1968ல் சட்டமன்றத்தில் தமிழ்நாட்டில் உள்ள எல்லா பகுதிகளிலும் மும்மொழி திட்டத்தை அகற்றிவிட்டு தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளுக்கும் இடம் அளித்துவிட்டு இந்தி மொழியை அறவே நீக்கி அண்ணா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்.

இதேபோல், 1986ல் எம். ஜி. ஆர் இருமொழி கொள்கையை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றினார். இதேபோன்று இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தி திணிக்கப்படக் கூடாது என்பதிலும், அவ்வாறு எடுக்கப்படும் முயற்சியை எதிர்த்து முறியடிப்போம் என்பதிலும் ஜெயலலிதா உறுதியாக இருந்தார்.

இந்த அரசும் இருமொழி கொள்கையில் உறுதியாக உள்ளது.

மக்களை பாதிக்கக்கூடிய எந்த திட்டமாக இருந்தாலும் அதனை எதிர்த்து மக்கள் நலனை பாதுகாப்பதில் முன்னோடியாக விளங்குவோம். பிரதமர் காப்பீடு திட்டத்தின் புதிய பகுதிகளையும், பயிர்களையும் அறிவிக்கை செய்து இந்த திட்டத்தை கூடுதல் பரப்பளவில் அதிகமானோர் பலன்பெறும் வகையில் இந்த ஆண்டு 434 கோடியே 74 லட்சம் ரூபாய் ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் விவசாயிகளுக்கு ரூ. 5,410 கோடியே 17 லட்சம் இழப்பீடு நிதியாக பெற்று தரப்பட்டுள்ளது. ரூ. 40 ஆயிரத்து 941 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தினை 2ம் கட்டத்தில் செயல்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை ரூ. 20 ஆயிரத்து 196 கோடி நிதி வழங்க உள்ளது. இதற்கான திட்ட பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.

பேரூரில் 6 ஆயிரத்து 78 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது.

மேலும், மழை நீரை சேமிக்க மக்கள் தங்கள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

கோதாவரி ஆற்றினை காவிரி ஆற்றுடன் இணைக்கும் திட்டத்தினை விரைவாக செயல்படுத்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சர்வதேச விளையாட்டுகளில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கும், அங்கீகரிக்கப்பட்ட தேசிய மாநில விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கும் 2 சதவீதம் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என அறிவித்தேன்.

அது 3 சதவீதமாக அறிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது பெரிய மாவட்டமாக உள்ள வேலூர் மாவட்டத்தை பிரிக்க அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை வந்தது.

அதனை பரிசீலித்து நிர்வாக வசதிக்காக வேலூரை தலைமையிடமாக கொண்டு ஒரு மாவட்டமும், திருப்பத்தூரை தலைமையிடமாக் கொண்டு ஒரு மாவட்டமும், ராணிப்பேட்டையை தலைமை இடமாக கொண்டு ஒரு புதிய மாவட்டமும் தோற்றுவிக்கப்படும்.

மேலும், வேலூர் மாவட்டத்தில் உள்ள கே. வி. குப்பத்தை தலைமையிடமாக கொண்டு ஒரு புதிய வட்டம் ஏற்படுத்தப்படும்.

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் ரூ. 15 ஆயிரத்தில் இருந்து ரூ. 16 ஆயிரமாக உயர்த்தப்படும். குடும்ப ஓய்வூதியம் மற்றும் சிறப்பு ஓய்வூதிம் ரூ. 7,500ல் இருந்து 8 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

நமது முன்னோர்கள் செய்த தியாகத்தின் விளைவாக பெறப்பட்ட இந்த சுதந்திர திருநாட்டை அனைத்து துறைகளிலும் முன்னேற்றி நமது நாட்டை ஒரு வல்லரசு நாடாக உயர்த்தவும், மேலும் தமிழ்நாட்டை இந்தியாவின் அனைத்தும் மாவட்டங்களிலும் முதன்மையாக ஆக்கிட நாம் சபதம் ஏற்போம். இவ்வாறு பேசினார்.


.

மூலக்கதை