கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடி ஏற்றினார்: இஸ்ரோ தலைவர் கே.சிவனுக்கு அப்துல்கலாம் விருது

தமிழ் முரசு  தமிழ் முரசு
கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடி ஏற்றினார்: இஸ்ரோ தலைவர் கே.சிவனுக்கு அப்துல்கலாம் விருது

சென்னை: சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடியை ஏற்றிவைத்தார். அப்துல்கலாம் விருது இஸ்ரோ தலைவர் கே. சிவனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இன்று 73வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. சுதந்திர தினத்தை ஒட்டி தலைநகர் டெல்லி உட்பட நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னையில் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையம், விமானநிலையம் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் போலீசார் கூடுதல் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தநிலையில், சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 8. 48 மணிக்கு வந்தார்.

அவரை தலைமை செயலாளர் சண்முகம் வரவேற்றார்.

பின்னர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை அதிகாரி ரியர் அட்மிரல் கே. ஜே. குமார், தென்னிந்திய பகுதி நிலைய அதிகாரி பிரிகேடியர் விக்ரம் சிங், தாம்பரம் விமானப்படை அதிகாரி எம். எஸ். அவானா, கடலோர காவல்படை கிழக்கு மண்டலம் இன்ஸ்பெக்டர் ஜெனரல் பரமேஷ், டிஜிபி திரிபாதி, சென்னை போலீஸ் கமிஷனர் ஏ. கே. விஸ்வநாதன், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி கே. ஜெயந்த் முரளி ஆகியோரை முதல்வருக்கு அறிமுகம் செய்துவைத்தார்.

பின்னர், காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஏற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து திறந்த வாகனத்தில் காவல்துறையின் அணிவகுப்பை பார்வையிட்டார்.

பின்னர், காலை 9 மணிக்கு நாட்டுப்பண் இசைக்க தேசிய கொடியை ஏற்றினார். தேசிய கொடியை ஏற்றி வைத்து இந்த ஆண்டுக்கான விருதுகளை வழங்கினார்.



அதன்படி, அ. ப. ஜெ. அப்துல்கலாம் விருது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன தலைவர் கே. சிவனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, துணிவு மற்றும் சாகசச்செயலுக்கான கல்பனா சாவ்லா விருது ப. ரம்யாலஷ்மி மீன்வளத்துறை உதவி இயக்குனர் கடலூர், அதீத துணிவுக்கான முதலமைச்சரின் சிறப்பு விருது திருநெல்வேலி மாவட்டம் கடையத்தை சேர்ந்த செந்தாமரை மற்றும் பெ. சண்முகவேலுவிற்கும் வழங்கப்பட்டது.

இவர்கள் இருவரும் முகமுடி கொள்ளையர்களை துணிச்சலாக விரட்டி அடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், முதலமைச்சரின் நல் ஆளுமை விருது- சென்னை பெருநகர் காவல் துறையின் மூன்றாவது கண் மற்றும் பேஸ்டேகர் செயலிக்கும், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தில் உள்ள நாகநதி ஆற்றிற்கு புத்துயிர் அளிப்பது, வணிகவரித்துறை வரி செலுத்துபவர்கள் ஜி. எஸ். டி முறைக்கு புலம் பெயர்வது குறித்த தகவல்களை வழங்குவது,

புதிய பதிவு எண்கள் குறித்த விவரங்களை அளிப்பது போன்றவற்றிற்காக புதிய அலைபேசி செயலியை உறுவாக்குதல் மற்றும் உதவி மையத்தினை உருவாக்குதல், பெருநகர சென்னை மாநராட்சி(பூங்காத்துறை) மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சென்னை சாந்தோமில் இன்பினிட்டி பூங்கா அமைத்ததுக்கும் வழங்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவை புரிந்தோருக்கான தமிழக அரசு விருதானது, ஆப்பர்சூனிட்டி அறிவுசார் குறைபாடுடைய குழந்தைகளுக்கான பள்ளி வேப்பேரி, சிறந்த மருத்துவர் விருது டாக்டர் வெற்றிவேல் செழியன், சிறந்த சமூக பணியாளர் சந்திரா பிரசாத், சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி விருது சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கும் வழங்கப்பட்டது.   சிறந்த சமூக பணியாளர் விருது கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த எம். சூசை மரியான், சிறந்த தொண்டு நிறுவன விருது சேலம் போதிமரம் தொண்டு நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, சிறந்த மாநகராட்சி விருது சேலம் மாநகராட்சிக்கும், சிறந்த நகராட்சிகளுக்கான முதல் பரிசு தருமபுரி நகராட்சிக்கும், 2ம் பரிசு வேதாரண்யம், 3ம் பரிசு அறந்தாங்கிக்கும் வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த பேரூராட்சிகள் விருது முதல் பரிசு மதுரை மாவட்டம் டி. கல்லுப்பட்டி, 2ம் பரிசு திருவாரூர் மாவட்டம் நன்னிலம், 3ம் பரிசு ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பேரூராட்சிக்கும் வழங்கப்பட்டது.   இதேபோல், முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது ஆண்கள் பிரிவில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பெ. நவீன்குமார், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மு. ஆனந்த்குமாருக்கும், பெண்கள் பிரிவில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த ரா. கலைவாணிக்கும் வழங்கப்பட்டது.

முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது பெற்ற கலைவாணி கூறுகையில், சாலையோரம் உள்ளவர்களை மீட்டு அரசு காப்பகங்களில் சேர்த்து வருகிறேன். எனது பணியை பாராட்டி விருது வழங்கப்பட்டது மகிழ்ச்சியை அளிக்கிறது.

இளைஞர்கள் முதியோர்களை வெளியில் அனுப்பாமல் வீட்டில் வைத்து பார்த்துக்கொள்ள வேண்டும். முதியோர் இல்லங்கள் இருக்கக்கூடாது என்பதே என்னுடைய கோரிக்கை.

இளைஞர் விருது பெற்ற நவீன் குமார் கூறுகையில், இந்த விருது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதிய உத்வேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.



பிச்சை எடுப்பவர்களுக்கு மக்கள் காசு கொடுக்க கூடாது. பணம் கொடுப்பது தர்மம் இல்லை.

அதற்கு பதிலாக அவர்களுக்கு உணவு, உடை கொடுப்பதே யாசகம் ஆகும். இதை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்பதே என்னுடைய கோரிக்கை.

நெல்லை கடையத்தை சேர்ந்த சண்முகவேலு, செந்தாமரை தம்பதி கூறுகையில், அனைவரின் வீட்டிலும் கண்டிப்பாக சிசிடிவி காமிரா வைக்க வேண்டும். அதுவே நமக்கு மிகவும் பாதுகாப்பு.

இந்த விருது எங்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

.

மூலக்கதை