முடங்கியது! நாய் இறைச்சி சர்ச்சையால் உணவு பாதுகாப்பு துறை... தரமற்ற உணவு பொருட்களை சோதிப்பதில் மெத்தனம்

தினமலர்  தினமலர்
முடங்கியது! நாய் இறைச்சி சர்ச்சையால் உணவு பாதுகாப்பு துறை... தரமற்ற உணவு பொருட்களை சோதிப்பதில் மெத்தனம்

சென்னையில், நாய் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து, தரமற்ற உணவு பொருட்கள் சோதனை செய்வதை, உணவு பாதுகாப்பு துறையினர் குறைத்து கொண்டனர்.

ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் இருந்து, சென்னை எழும்பூருக்கு, 2018 நவ., 17ல் வந்த, ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில், 2,000 கிலோ இறைச்சியை, மாநகராட்சி சுகாதாரத் துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்தனர். இறைச்சியின் தன்மையை வைத்து, நாய் இறைச்சி என, தகவல் பரவியது. இதனால், சென்னை உட்பட, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், மூன்று மடங்கு இறைச்சி விற்பனை குறைந்தது. மேலும், அசைவ உணவகங்களில், உணவு விற்பனையும் பாதியாக குறைந்தது. இதையடுத்து, பல்வேறு தரப்பில் இருந்து, உணவு பாதுகாப்பு துறைக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதன் காரணமாக, உணவு பாதுகாப்பு துறையினர், பல தொலைபேசி அழைப்புகளை எடுக்கவே தயங்கினர்.

இதற்கிடையில், இறைச்சியை ஆய்வு செய்த, வேப்பேரி கால்நடை மருத்துவ கல்லுாரி மருத்துவர்கள், 'உணவு பாதுகாப்பு துறையினர் பிடித்தது, நாய் இறைச்சி இல்லை; ஆட்டிறைச்சி' என, ஆய்வறிக்கை வெளியிட்டனர். இதன்பின், தமிழ்நாடு இறைச்சி வியாபாரிகள், 'உணவு பாதுகாப்பு துறையினருக்கும், போலீசாருக்கும் லஞ்சம் கொடுத்து தான், இறைச்சியை, வெளி மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்கிறோம்' என, பகிரங்க குற்றச்சாட்டை வைத்தனர்.

இதன் காரணமாக, தரமற்ற இறைச்சிகள் மற்றும் உணவு பொருட்கள் குறித்து புகார்கள் வந்தாலும், அதன் மீது உணவு பாதுகாப்பு துறையினர் நடவடிக்கை எடுக்க தயங்கினர். நாய் இறைச்சி பிரச்னையின் போது, பணியில் இருந்த, சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர், வேறு மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார்.அதன்பின் வந்த அலுவலரும், தரமற்ற குடிநீர் சோதனையில் மட்டுமே கவனம் செலுத்தினார். ஆனால், சென்னையில், இன்றைக்கும் தரமற்ற குடிநீர், இறைச்சிகள் உள்ளிட்ட உணவு பொருட்கள் விற்பனையில் உள்ளன. நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள், அலட்சியமாக செயல்படுகின்றனர்.

இது குறித்து, சமூக ஆர்வலர், காசிமாயன் கூறியதாவது:உரிமம் பெறாத கடைகளில், தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்தால், உணவு பாதுகாப்பு துறை சட்டப்பிரிவு, 63ன்படி, 10 லட்சம் ரூபாய் அபராதம், ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்க முடியும். உரிமம் பெற்ற கடைகளில், தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்தால், 1 லட்சம் ரூபாய் அபராதம், ஒரு மாத சிறை தண்டனையும் வழங்க முடியும்.ஆனால், தரமற்ற உணவு பொருட்கள் குறித்து, உணவு பாதுகாப்பு துறையில் புகார் அளித்தால், அதன் மீது முறையான நடவடிக்கை எடுப்பதில்லை. மாறாக, லஞ்சம் பெற்று, அந்த கடைகளுக்கு, மிக குறைந்த அளவில் அபராதம் விதிக்கின்றனர்.சென்னையில், இன்றைக்கும் பல்வேறு பகுதிகளில், தரமற்ற இறைச்சிகளும், நாய் இறைச்சிகளும் விற்பனை செய்யப்படுகின்றன. எண்ணெய், நெய் உள்ளிட்ட பல்வேறு தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால், இளம் வயதிலேயே, பலருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது.இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய உணவு பாதுகாப்பு துறையினர், மவுனமாக உள்ளனர். இவர்களுக்கு, எந்த உணவகத்தில் சென்றாலும், அங்கு, உணவு, தங்குமிடங்கள் ஆகியவை இலவசமாக வழங்கப்படுகின்றன. மாதந்தோறும், 'கமிஷன்' வந்து விடுகிறது. இதன் காரணமாக, நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.
மாநகராட்சிக்கு கட்டுப்பாடுசென்னை மாநகராட்சி சுகாதாரத் துறையினர், தரமற்ற உணவு பொருட்களை பறிமுதல் செய்து, கடைகள் மீது நடவடிக்கை எடுத்து வந்தனர். மாநகராட்சி சுகாதாரத் துறையினர் ஆய்வு செய்து, உணவு பொருட்களை பறிமுதல் செய்தாலும், உணவு பாதுகாப்பு துறையினரிடம் தான் ஒப்படைக்க வேண்டும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. சோதனை செய்யப்படும் இடம் குறித்தும், தெரிவிக்க வேண்டும் என, உணவு பாதுகாப்பு துறையினர், மாநகராட்சிக்கு கட்டுப்பாடுகளை விதித்தனர். இதன் காரணமாக, மாநகராட்சி சுகாதாரத் துறையினர் சோதனை செய்வதை கைவிட்டனர்.

- நமது நிருபர் -

மூலக்கதை