சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் கெர்பர், குவித்தோவா அதிர்ச்சி தோல்வி: யபான் வாங் முன்னேற்றம்

தினகரன்  தினகரன்
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் கெர்பர், குவித்தோவா அதிர்ச்சி தோல்வி: யபான் வாங் முன்னேற்றம்

சின்சினாட்டி: அமெரிக்காவில் நடைபெறும் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், முன்னணி வீராங்கனைகள் ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), பெத்ரா குவித்தோவா (செக்.) அதிர்ச்சி தோல்வியடைந்து  ஏமாற்றத்துடன் வெளியேறினர்.முதல் சுற்றில் எஸ்டோனியா வீராங்கனை அனெட் கோன்டாவெய்ட்டுடன் மோதிய கெர்பர் 6-7 (7-9), 2-6 என்ற நேர் செட்களில் போராடி தோற்றார். மற்றொரு முதல் சுற்றில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்கரி 6-4, 2-6, 6-3 என்ற செட் கணக்கில்  குவித்தோவாவை வீழ்த்தினார்.அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் தனது முதல் சுற்றில் 6-3, 3-6, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் கிகி பெர்டன்சை (நெதர்லாந்து) வென்றார்.அவரது சகோதரி செரீனா வில்லியம்ஸ் காயம் காரணமாக சின்சினாட்டி ஓபனில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.சீனாவின் யபான் வாங் 3-6, 7-5, 6-3 என்ற செட் கணக்கில் மோனிகா புயிகை (போர்டோ ரிகோ) வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார். முன்னணி வீராங்கனைகள் டோனா வேகிச் (குரோஷியா), விக்டோரியா அசரென்கா (பெலாரஸ்), மேடிசன் கீஸ் (அமெரிக்கா), டாரியா கசட்கினா (ரஷ்யா), எகடரினா அலெக்சாண்ட்ரோவா (ரஷ்யா), சோபியா கெனின் (அமெரிக்கா) ஆகியோரும்  2வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

மூலக்கதை