ஜம்முவை நேரடியாக பார்வையிட நான் எப்போது வரலாம்? காஷ்மீர் கவர்னருக்கு ராகுல் கேள்வி

தினகரன்  தினகரன்
ஜம்முவை நேரடியாக பார்வையிட நான் எப்போது வரலாம்? காஷ்மீர் கவர்னருக்கு ராகுல் கேள்வி

புதுடெல்லி: ‘ஜம்மு காஷ்மீரை பார்வையிடுவதற்கு எப்போது நான் வர வேண்டும்,’ என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை சமீபத்தில் மத்திய அரசு ரத்து செய்தது. மேலும் இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது. இதனையடுத்து, ஜம்மு காஷ்மீரில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு பார்வையிடுவதற்காக வரும் அரசியல் தலைவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஜம்முவில் மோசமான சூழல் நிலவுவதாகவும் இதனால், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியிருந்தார். இதற்கு ஜம்மு காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக், பிராந்தியத்தில் அமைதியான சூழல் தான் நிலவுகிறது. நான் இங்கிருந்து விமானம் அனுப்புகிறேன், நீங்கள் வந்து பார்வையிட்டு செல்லுங்கள் என்று ராகுல்காந்திக்கு பதில் அளித்தார். நீங்கள் விமானம் அனுப்ப வேண்டாம், மக்களையும், வீரர்களையும் சந்தித்து பேசுவதற்கு சுதந்திரம் ெகாடுத்தாலே போதுமானது என ராகுல்காந்தி தனது டிவிட்டரில் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.  இதற்கு பதிலளித்திருந்த கவர்னர், ராகுல்காந்தி காஷ்மீர் பள்ளத்தாக்கு வருவதற்கு நிபந்தனைகள் விதிப்பதாகவும், பிரதிநிதிகள் குழுவை அழைத்து வருவதாக கூறுவதன் மூலம் அமைதியின்மையை உருவாக்க முயலுகிறார் என்றும் பதிவிட்டு இருந்தார். இதன் தொடர்ச்சியாக மீண்டும் டுவிட் செய்துள்ள ராகுல்காந்தி, “  எனது பதிவுக்கான உங்களது தெளிவற்ற பதிலை பார்த்தேன். ஜம்மு காஷ்மீர் மற்றும் பொதுமக்களை சந்திப்பதற்கான  உங்களது அழைப்பை  நிபந்தனையின்றி நான் ஏற்றுக்ெகாள்கிறேன். நான் எப்போது வரலாம்?” என்று பதிவிட்டுள்ளார்.

மூலக்கதை