உச்ச நீதிமன்றத்தில் ராம் லாலா தரப்பு வாதம் அயோத்தியில் ராமர் பிறந்தார் என்பது இந்துக்களின் நம்பிக்கை

தினகரன்  தினகரன்
உச்ச நீதிமன்றத்தில் ராம் லாலா தரப்பு வாதம் அயோத்தியில் ராமர் பிறந்தார் என்பது இந்துக்களின் நம்பிக்கை

புதுடெல்லி: ‘அயோத்தியில் ராமர் பிறந்தார் என்பது இந்துக்களின் நம்பிக்கை. அங்கு ராமர் கோயில் இருந்ததாக பழங்கால நூல்களில், ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, ராமர் வாழ்ந்ததாக நம்பப்படும் இடத்தை இரண்டாகவோ  மூன்றாகவோ பிரிக்க முடியாது,’ என ராம் லாலா தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.27 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் கடந்த 6ம் தேதி மீண்டும் துவங்கியது. வாரத்தில் 5  நாட்களும் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன் நேற்று 6ம் நாளாக விசாரணை தொடர்ந்தது. அப்போது, ராமஜென்ம பூமி  என்றழைக்கப்படும் சர்ச்சைக்குரிய நிலத்தில் முன்பு கோயில் இருந்ததா என்பது குறித்து வாதாடப்பட்டது. மனுதாரர்களில் ஒருவரான ராம் லாலா விராஜ்மான் சார்பில் ஆஜரான வக்கீல் சி.எஸ். வைத்தியநாதன் வாதாடியதாவது: 1854ல் ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனி வெளியிட்ட அரசிதழில், அயோத்தி நகரின் கிழக்கு பகுதியில் ராமரின்  கோட்டை இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்து புராணங்களிலும் அயோத்தியில் ராமர் பிறந்ததாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அயோத்தியில் ராமர் பிறந்தார், ராமஜென்ம பூமியில் அவர் வாழ்ந்தார் என்பது இந்துக்களின் நம்பிக்கை.  இவ்வாறு கூறினார்.அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘அப்படியென்றால், பாபர் மசூதி என முதன்முதலில் எப்போது அறியப்படுகிறது?’’ என கேட்டார். அதற்கு வக்கீல் வைத்தியநாதன், ‘‘19ம் நூற்றாண்டில்தான் இது பாபர் மசூதியாக  குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு முன் பாபர் மசூதி இருந்ததற்கு சான்று இல்லை’’ என்றார்.

மூலக்கதை