அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்காவிட்டால் கரூர் கலெக்டர் ஆபீசில் விவசாயிகள் 16ம்தேதி சமையல் செய்யும் போராட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்காவிட்டால் கரூர் கலெக்டர் ஆபீசில் விவசாயிகள் 16ம்தேதி சமையல் செய்யும் போராட்டம்

கரூர்: அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்காவிட்டால் வரும் 16ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் சமையல் செய்து காத்திருப்பு போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் அமராவதி அணை உள்ளது.

திருப்பூர், கரூர் மாவட்ட பாசன பகுதிகள் மற்றும் குடிநீர் ஆதாரத்திற்கு அமராவதி அணையில் இருந்து நீர் திறந்து விடப்படுகிறது. 18 வாய்க்கால்களுக்கு தண்ணீர் விடப்பட்டு சுமார் 54 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.

அமராவதி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக அணையின் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

கடந்த மாதம் அமராவதி அணையில் இருந்து திருப்பூர் மாவட்ட பகுதிகளுக்கு மட்டும் நீர் திறக்கப்பட்டது. இதற்கு கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், ‘’கரூர் மாவட்ட நிலத்தடி நீர் பாதுகாப்பு மற்றும் சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த விவசாயிகளை அதிகாரிகள் சமாதானம் செய்தனர். இந்த நிலையில் தற்போது அமராவதி அணையில் இருந்து 2வது முறையாக திருப்பூர் மாவட்டத்திற்கு தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதில் புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு 11ம் தேதி முதல் 25ம் தேதி தேதி 15 நாட்களுக்கு நீர் திறப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு கரூர் மாவட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் ஆலோசனைக் கூட்டத்தின்படி கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று முறையிட வந்தனர். கலெக்டர் இல்லாததால் மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷை சந்தித்து பேசினர்.

தண்ணீர் திறக்காமல் புறக்கணிப்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுபற்றி அமராவதி பாசன விவசாயிகள் சங்க செயலாளர் ராமலிங்கம் கூறியது: கரூர் மாவட்டத்திற்கு தண்ணீர் திறக்கக்கோரி முறையிட்டோம். கடந்த 8 மாதமாக தண்ணீர் திறக்கவில்லை.

இப்போது அமராவதி திருப்பூர் மாவட்ட புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு விவசாயத்திற்காக தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டு தண்ணீர் திறந்து விட்டுள்ளனர். 40 ஊராட்சிகளுக்கு இங்கு குடிநீருக்கே தட்டுப்பாடு என கேட்கின்ற நிலையில், திருப்பூர் மாவட்டத்திற்கு மட்டும் பாசனத்துக்காக அரசாணை வெளியிட்டுள்ளார்.

எங்களது வாழ்வாதாரமே போராட்டமாக ஆகிவிட்டது. நாளை தண்ணீர் திறக்காவிட்டால் வரும் 16ம் தேதி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து சமையல் செய்து சாப்பிட்டு காத்திருப்பு போராட்டத்தை நடத்துவது என முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


.

மூலக்கதை