நாளை 73வது சுதந்திர தினவிழா கொண்டாட்டம்: தமிழகத்தில் 1 லட்சம் போலீஸ் பாதுகாப்பு..தீவிரவாதிகள் அச்சுறுத்தலையடுத்து நாடு முழுவதும் உஷார்நிலை

தமிழ் முரசு  தமிழ் முரசு
நாளை 73வது சுதந்திர தினவிழா கொண்டாட்டம்: தமிழகத்தில் 1 லட்சம் போலீஸ் பாதுகாப்பு..தீவிரவாதிகள் அச்சுறுத்தலையடுத்து நாடு முழுவதும் உஷார்நிலை

சென்னை: சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தையொட்டி சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நாட்டின் 73வது சுதந்திர தினவிழா நாளை வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை தொடர்ந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில உள்துறை செயலாளர்களுக்கும் சுதந்திர தினத்தன்று பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க உத்தரவிட்டுள்ளது.



அதன்படி, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட கண்காணிப்பாளர்கள் மற்றும் அனைத்து மாநகர கமிஷனர்களுக்கும் பாதுகாப்பு நடவடிக்கை எடுப்பது குறித்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையை பொறுத்தவரையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை கோட்டையில் தேசியக்கொடி ஏற்றுகிறார். இதன் காரணமாக, சென்னை கோட்டை பகுதியை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் கோட்டை முழுவதும்,  நவீன சி. சி. டி. வி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையிலிருந்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை முழுவதும் போலீஸ் கமிஷனர் ஏ. ேக. விஸ்வநாதன் உத்தரவுப்படி கூடுதல் கமிஷனர்கள் தினகரன், பிரேம்  ஆனந்த் சின்ஹா, போக்குவரத்து கூடுதல் கமிஷனர் அருண் ஆகியோர் தலைமையில் 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.



 இது தவிர, பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களான சென்னை விமான நிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், திரையரங்கம், கேளிக்கை பூங்காக்கள், கிண்டி சிறுவர் பூங்கா மற்றும் வழிபாட்டுத் தலங்களில் கூடுதலாக போலீசார் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் சென்னையிலுள்ள அனைத்து தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால் காவல்துறைக்கு தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

24 மணி நேரமும் ரோந்து வாகனங்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளதால் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

போலீசார் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

.

மூலக்கதை