கேரளாவை புரட்டிய கனமழை: விவசாயிகள் கடனை திருப்பி செலுத்த அவகாசம் வேண்டும்: ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு ராகுல்காந்தி கடிதம்

தினகரன்  தினகரன்
கேரளாவை புரட்டிய கனமழை: விவசாயிகள் கடனை திருப்பி செலுத்த அவகாசம் வேண்டும்: ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு ராகுல்காந்தி கடிதம்

டெல்லி: கனமழையால் பாதிக்கப்பட்ட கேரள விவசாயிகள், தாங்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதற்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.  கேரளாவில் கடந்த 2 வாரமாக பெய்து வந்த கனமழையால் கண்ணூர், வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், பாலக்காடு, எர்ணாகுளம், இடுக்கி உட்பட 8 மாவட்டங்களில் 80க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. தொடந்து மழை  பெய்து வந்ததால் மீட்பு பணிகளை மேற்கொள்வதில் கடும் சிக்கல் நீடித்தது. நேற்று முன்தினம் முதல் மழை சற்று குறைந்துள்ளது. பல பகுதிகளில்  வெள்ளம் வடிய தொடங்கி உள்ளது.இதனால் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் மீட்பு பணிகள் மின்னல் வேகத்தில் நடந்து வருகின்றன. இதற்கிடையே, கடந்த 6 நாட்களில் பலியானோர் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளது. கனமழையை தொடர்ந்து திருச்சூர், எர்ணாகுளம்,  கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம், கண்ணூர், கோட்டயம், ஆலப்புழா, இடுக்கி ஆகிய 9 மாவட்டங்களில் கல்வி  நிறுவனங்களுக்கு இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பெரிதும் பாதிக்கப்பட்ட  வயநாடு, மலப்புரம்  மாவட்டங்களை நேற்று ஹெலிகாப்டரில் சென்று முதல்வர் பினராய் விஜயன் பார்வையிட்டார். மேலும் நிவாரண முகாம்களையும் பார்வையிட்ட  அவர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு 3 மாதங்களுக்கு அரிசி உள்ளிட்ட இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவித்தார். தொடர்ச்சியாக இன்று மழை, வெள்ளம்,  நிலச்சரிவால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், கனமழையால் பாதிக்கப்பட்ட கேரள விவசாயிகள், தாங்கள் வாங்கிய  விவசாய கடனை திருப்பி செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், கடனை திருப்பி செலுத்தாத விவசாயிகள் மீது எந்தவிதமான நடவடிக்கையையும் மேற்கொள்ள கூடாது என்றும் கேரளாவில் கடந்த  ஆண்டை போன்று இந்த ஆண்டும் பெய்த வரலாறு காணாத கனமழையால் விவசாயிகள் பாதிப்பு அடைந்துள்ளதாகவும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். கடந்த சில நாட்களாக கேரள மாநிலத்தில் முகாமிட்டு ராகுல்காந்தி வெள்ள பாதிப்புகளை  பார்வையிட்டு வருகிறார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக ராகுல்காந்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை