தடம் பதிப்பாரா தவான்: இந்தியா–விண்டீஸ் 3வது மோதல் | ஆகஸ்ட் 13, 2019

தினமலர்  தினமலர்
தடம் பதிப்பாரா தவான்: இந்தியா–விண்டீஸ் 3வது மோதல் | ஆகஸ்ட் 13, 2019

 போர்ட் ஆப் ஸ்பெயின்: இந்தியா, விண்டீஸ் அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. இதில், இந்தியாவின் தவான் எழுச்சி காண்பார் என  எதிர்பார்க்கப்படுகிறது.

விண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி, ‘டுவென்டி–20’ கோப்பை வென்றது. தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி மழையால் ரத்தானது. இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றி பெற்று 1–0 என தொடரில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி இன்று போர்ட் ஆப் ஸ்பெயினில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடக்கிறது.

தடுமாறும் தவான் 

உலக கோப்பை தொடரில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்ட ஷிகர் தவான், விண்டீஸ் தொடரில் தொடர்ந்து ஏமாற்றுகிறார். ‘டுவென்டி–20’ல் 1, 23, 3 ரன் எடுத்த இவர், 2வது ஒருநாள் போட்டியில் 2 ரன்னுக்கு அவுட்டானார். இன்று எழுச்சி பெற வேண்டும். இவருடன் ரோகித் ரன் மழை பொழிந்தால், கேப்டன் கோஹ்லிக்கு நெருக்கடி குறையும்.

ரிஷாப் நெருக்கடி

‘மிடில் ஆர்டரில்’ ரிஷாப் பன்ட் தொடர்ந்து ஏமாற்றுகிறார். இதனால் ஐந்தாவதாக வரும் ஸ்ரேயாஸ் ஐயரை, ரிஷாப்பிற்கு முன்னதாக களமிறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பின் வரிசையில் ரவிந்திர ஜடேஜாவுடன், கேதர் ஜாதவ் அல்லது லோகேஷ் ராகுல் இடம் பெற வாய்ப்புள்ளது.

வருவாரா சைனி

பவுலிங்கில் 2வது போட்டியில் 4 விக்கெட் சாய்த்த புவனேஷ்வர், முகமது ஷமி (2 விக்.,) நம்பிக்கை தருகின்றனர். சுழலில் குல்தீப் 2 விக்கெட் சாய்த்தாலும் அதிக ரன்கள் விட்டுத்தருகிறார். இன்று ஜடேஜாவுடன் சகால் அல்லது நவ்தீப் சைனி இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெற்றி முக்கியம்

விண்டீஸ் அணி ஏற்கனவே ‘டுவென்டி–20’ தொடரை இழந்துள்ளது. ஒருநாள் தொடரிலும் சோகம் ஏற்படுவதை தவிர்க்க, இன்று வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. பேட்டிங்கில் வீரர்கள் பொறுப்பான ஆட்டத்தை தர வேண்டும்.

அனுபவ கெய்ல் 4, 11 என சொற்ப ரன்னுக்கு அவுட்டாகி அதிர்ச்சி தருகிறார். எவின் லீவிஸ் மட்டும் ஆறுதல் தருகிறார். ஹெட்மயர், ஷாய் ஹோப், நிக்கோலஸ் பூரன் கூட்டணி எழுச்சி பெற்றால் நல்லது. கேப்டன் ஹோல்டர், அனுபவ பிராத்வைட் கைகொடுக்க வேண்டும்.

காட்ரெல் நம்பிக்கை

பவுலில்கில் ‘சல்யூட்’ காட்ரெல், ‘ஆல் ரவுண்டர்’ பிராத்வைட் சிறப்பாக செயல்படுகின்றனர். மற்றபடி ஒசானே தாமஸ், கீமர் ரோச் எதிர்பார்த்த அளவுக்கு அளவுக்கு செயல்படாதது ஏமாற்றம் தான்.

 

துரத்தும் மழை

விண்டீஸ் தொடரில் மழை தொல்லை அதிகமாக உள்ளது. முதல் போட்டி ரத்தாக, இரண்டாவது போட்டியும் பாதிக்கப்பட்டது. இன்றும் மழையால் போட்டி ரத்தாகும் எனத் தெரிகிறது. போட்டி துவங்கும் நேரம் முதல் இடியுடன் கூடிய மழை வர குறைந்த பட்சம் 54, அதிகபட்சம் 88 சதவீதம் வரை வாய்ப்புள்ளது.

 

5

இன்று இந்திய அணி சாதிக்கும் பட்சத்தில், விண்டீஸ் மண்ணில் அந்த அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் 5வது முறையாக கோப்பை வென்று அசத்தலாம். இதற்கு முன் நடந்த 8 தொடரில் இரு அணிகளும் தலா 4 முறை கோப்பை வென்றன.

* 2009, 2011, 2017 என கடைசியாக பங்கேற்ற 3 தொடரிலும் இந்தியா தான் கோப்பை வென்றது.

 

10

போர்ட் ஆப் ஸ்பெயின் மைதானத்தில் 1983 முதல் இந்திய அணி பங்கேற்ற 20 போட்டிகளில் 10ல் வென்றது. கடைசியாக களமிறங்கிய 8 போட்டிகளில் 7ல் வென்றது. ஒரு போட்டி மழையால் ரத்தானது.

* விண்டீசை பொறுத்தவரையில் கடந்த 2007க்குப் பின், இந்தியாவுக்கு எதிரான போட்டி எதிலும் வென்றது இல்லை.

 

61

இந்தியா, விண்டீஸ் அணிகள் 129 ஒருநாள் போட்டிகளில் மோதின. இந்தியா 61, விண்டீஸ் 62ல் வென்றன. 2 போட்டி ‘டை’ ஆக, 4 போட்டிக்கு முடிவு இல்லை.

மூலக்கதை