உச்சத்திலும் உச்சம் தொட்டது தங்கம்; பவுன் ரூ.29 ஆயிரத்தை தாண்டியது

தினமலர்  தினமலர்
உச்சத்திலும் உச்சம் தொட்டது தங்கம்; பவுன் ரூ.29 ஆயிரத்தை தாண்டியது

சென்னை: தமிழகத்தில் தங்கம் விற்பனையில் முதல் முறையாக 22 காரட் ஆபரண தங்கம் பவுன் விலை 29 ஆயிரம் ரூபாயை தாண்டி புதிய சாதனை படைத்துள்ளது.

அமெரிக்கா- சீனா இடையிலான வர்த்தக போர் உள்ளிட்ட சர்வதேச நிலவரங்களால் அமெரிக்க டாலர் மதிப்பு குறைந்து வருகிறது. இதனால் டாலரில் அதிகளவில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதையடுத்து சர்வதேச சந்தையில் ஜூலை இறுதியில் இருந்து தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இந்தியாவிலும் தங்கம் விலை எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து வருகிறது.

கடந்த 1ம் தேதி கிராம் தங்கம் 3,310 ரூபாய்க்கும் பவுன் 26 ஆயிரத்து 480 ரூபாய்க்கும் விற்றது. அதற்கு அடுத்த நாளே கிராம் 3,383 ரூபாயாகவும் பவுன் 27 ஆயிரத்து 64 ரூபாயாகவும் அதிகரித்து புதிய சாதனை படைத்தது. பின் ஐந்து நாட்களில் அதாவது 7ம் தேதி கிராம் தங்கம் 3,547 ரூபாய்; பவுன் 28 ஆயிரத்து 376 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது. நேற்று முன்தினம் கிராம் தங்கம் 3,603 ரூபாய்க்கும் பவுன் 28 ஆயிரத்து 824 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. கிராம் வெள்ளி 49 ரூபாய்க்கு விற்பனையானது.

இந்நிலையில் நேற்று தங்கம் கிராமுக்கு 24 ரூபாய் அதிகரித்து 3627 ரூபாய்க்கு விற்பனையானது. பவுன் 192 ரூபாய் அதிகரித்து 29 ஆயிரத்து 16 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து முதல் முறையாக பவுன் விலை 29 ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளது. இரு வாரத்தில் மட்டும் தங்கத்தின் விலை பவுனுக்கு 2,536 ரூபாய் உயர்ந்துள்ளது. மாத இறுதிக்குள் 30 ஆயிரம் ரூபாயை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை