ஹாங்காங்கில் தொடரும் போராட்டம் விமான நிலையத்தில் சோதனைகள் ரத்து

தினகரன்  தினகரன்
ஹாங்காங்கில் தொடரும் போராட்டம் விமான நிலையத்தில் சோதனைகள் ரத்து

ஹாங்காங்: தொடர் போராட்டம் காரணமாக ஹாங்காங் விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஹாங்காங்கில் கைதிகள் பரிமாற்ற சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டம் நடந்து வருகின்றது. நாள்தோறும் போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டன பேரணி நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டுள்ளனர். இது, கடந்த 2 நாட்களாக தொடர்கிறது.விமான நிலைய நுழைவு வாயிலில் பயணிகளின் வருகை மற்றும் பயணிகள் வெளியேறும் பகுதியில் போராட்டக்காரர்கள் திரண்டுள்ளதால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக விமான நிலையத்தின் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. விமான நிலையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘ஹாங்காங் சர்வதேச விமான நிலைய முனையத்தின் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. விமான நிலைய சோதனைகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் விமான நிலைய கட்டிடத்தில் இருந்து உடனடியாக வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்,’ என்று கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை