அபய குரல் எழுப்பும் வாகன துறை 19 ஆண்டில் இல்லாத சரிவு அரசுக்கு கோரிக்கை

தினமலர்  தினமலர்
அபய குரல் எழுப்பும் வாகன துறை 19 ஆண்டில் இல்லாத சரிவு அரசுக்கு கோரிக்கை

புதுடில்லி:ட்டின் வாகன விற்பனையில், கடந்த, 19 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, ஜூலை மாதத்தில், 18.71 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது.மேலும், பயணியர் வாகன விற்பனை, தொடர்ந்து, ஒன்பது மாதங்களாக, வீழ்ச்சி கண்டு வருகிறது.


ஜூலை மாதத்தில் மட்டும், 31 சதவீதம் அளவுக்கு, பயணியர் வாகன விற்பனை, சரிவை சந்தித்துள்ளது.இது குறித்து, 'சியாம்' எனும், 'இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளதாவது:வாகன விற்பனை, ஜூலை மாதத்தில், 19 ஆண்டுகளில் இல்லாத வகையில், 18.71 சதவீத சரிவை சந்தித்துள்ளது. இதற்கு முன், டிசம்பர் 2000த்தில், வாகன விற்பனை, 21.81 சதவீதம் சரிந்தது.இதேபோல், உள்நாட்டு பயணியர் வாகன விற்பனையும், 19 ஆண்டுகளில் இல்லாத வகையில், 30.98 சதவீதம் சரிந்துள்ளது.


வேலை இழப்பு



வாகன விற்பனை, இப்படி சரிவடைந்து வருவதை அடுத்து, கடந்த மூன்று மாதங்களில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், வேலை இழந்துள்ளனர்.கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகன விற்பனை, 30.98 சதவீதம் சரிந்துள்ளது. மொத்தம், 2.01 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதுவே, கடந்த ஆண்டு, இதே மாதத்தில், 2.91 லட்சம் வாகனங்கள் விற்பனை ஆகியிருந்தன.உள்நாட்டு கார் விற்பனை, 35.95 சதவீதம் சரிந்துள்ளது.



கடந்த ஆண்டு ஜூலையில், 1.92 லட்சம் கார்கள் விற்பனை ஆகியிருந்த நிலையில், கடந்த ஜூலையில், 1.23 லட்சம் கார்களே விற்பனை ஆகியுள்ளன.மோட்டார் சைக்கிள் விற்பனை, 18.88 சதவீதமும், மொத்த இருசக்கர வாகன விற்பனை, 16.82 சதவீதமும், கடந்த ஜூலை மாதத்தில் சரிவை சந்தித்துள்ளன. வர்த்தக வாகனங்களைப் பொறுத்தவரை, 25.71 சதவீதம் சரிவு காணப்பட்டுள்ளது.



வாகனப் பதிவும், ஜூலை மாதத்தைப் பொறுத்தவரை, 18.71 சதவீதம் சரிவடைந்துள்ளது. இவ்வாறு சியாம் அமைப்பு தெரிவித்து உள்ளது.இந்நிலையில், இந்த சரிவு குறித்து, இவ்வமைப் பின், டைரக்டர் ஜெனரல், விஷ்ணு மாத்துார் கூறியதாவது:இந்த தரவுகள், வாகனத் துறை எவ்வளவு சரிந்துள்ளது என்பதையும், அரசு எவ்வளவு விரைவாக உதவ வேண்டும் என்பதையும் உணர்த்துவதாக இருக்கிறது.



அரசு உதவி




இத்துறையானது, விற்பனையை அதிகரிக்க, தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்து வருகிறது. இப்போது, அரசின் மீட்பு நிதியை கோரும் நிலைக்கு இத்துறை வந்துவிட்டது என, கருதுகிறேன்.அரசின் மீட்பு நிதியின் மூலம், சரிவை தடுத்து, வாகனத் துறையை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திருப்ப முடியும் என, கருதுகிறேன்.



கடந்த மூன்று மாதங்களில், வாகன தயாரிப்பு நிறுவனங்களில், தற்காலிக பணியாளர்களாக இருந்த, 15 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். 300 வாகன முகவர்கள், தங்கள் நிறுவனங் களை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால், இரண்டு லட்சம் வேலைகள் பாதிப்புக்குள்ளாகும்.இதற்கு முன், 2008 - -09 மற்றும் 2013-- - 14 ஆகிய ஆண்டுகளில், இத்தகைய வீழ்ச்சியை, இத்துறை சந்தித்தது. இருப்பினும், அப்போது, இத்துறையின் ஒரு சில பிரிவுகளாவது வளர்ச்சி கண்டது.



ஆனால், இந்த முறை, அனைத்து பிரிவுகளுமே விற்பனை சரிவை சந்தித்து வருகின்றன. விற்பனையை அதிகரிக்க, ஜி.எஸ்.டி.,யை குறைக்க வேண்டும். குறைந்தபட்சம், தற்காலிக மாகவாவது இந்த குறைப்பு நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். இதன் மூலமாக, விற்பனையை அதிகரிக்க முயற்சித்து பார்க்கலாம்.இந்த துறை எவ்வளவு அதிகம் கீழே விழுகிறதோ, அவ்வளவு அதிகம் மீண்டும் மேலே வருவதற்கு கஷ்டமாகிவிடும்.



இத்துறை சரிந்தால், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவும் சரியும். எனவே, அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை