நாங்கள் யாருடனும் போரை விரும்பவில்லை: ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமத் ஜாவத் சாரிஃப் பேச்சு

தினகரன்  தினகரன்
நாங்கள் யாருடனும் போரை விரும்பவில்லை: ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமத் ஜாவத் சாரிஃப் பேச்சு

ஈரான்: தங்கள் பிராந்தியத்தில் அமைதியற்ற தன்மையை ஏற்படுத்துவதற்கு அமெரிக்கா முயல்கிறது என்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமத் ஜாவத் சாரிஃப் தெரிவித்துள்ளார். ஈரான் மீது அமெரிக்கா அதிக அழுத்தத்தை அளித்து வரும் நிலையில் அதன் பிராந்தியத்தில் தனது படையை அதிகரித்து வருவதாலும் வளைகுடா பகுதியில் பதற்றம் நிலவுகிறது.உலகின் மிக முக்கியமான வர்த்தகப் பாதையான ஹோர்மஸ் நீரிணைப்புப் பகுதியில் ஈரானின் ஆக்கிரமிப்பை எதிர்ப்பதற்கு சர்வதேச கடற்படைக் கூட்டணிக்கு ட்ரம்ப் நிர்வாகம் நட்பு நாடுகளை தொடர்புக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அமெரிக்காவின் சமீபத்திய நடவடிக்கை குறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமத் ஜாவத் சாரிஃப் கூறியிருக்கிறார்.இதுகுறித்து அவர் கூறும்போது, “எங்கள் பாதுகாப்புக்காக நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கூறும் நிலையில் அமெரிக்கா இல்லை. எனவே இந்த பிராந்தியத்தில் அமைதியற்ற தன்மை நிலவுவதற்கு அமெரிக்கா முக்கிய காரணமாக அமைந்துள்ளது. நாங்கள் வேண்டுவது எல்லாம் எங்கள் பிராந்தியத்தில் வசிக்கும் அனைவருக்கும் அமைதியான நிலைமை வேண்டும் என்பதே ஆகும். நான் ஒன்றைத் தெளிவாகக் கூற விரும்புகிறேன். நாங்கள் யாருடனும் போரை விரும்பவில்லை மற்றும் மோதலையும் விரும்பவில்லை. நாங்கள் வேண்டுவது எங்கள் மக்களுக்கான முன்னேற்றம். எங்கள் பிராந்தியத்துக்கான முன்னேற்றம் ஆகும். நீங்கள், இந்தப் பிராந்தியத்திற்கு வரும் அச்சுறுத்தல் குறித்துப் பேசுகிறீர்கள் என்றால் அந்த அச்சுறுத்தல்கள் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளால்தான் வருகின்றது” என்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமத் ஜாவத் சாரிஃப் தெரிவித்துள்ளார். மேலும் மத்தியக் கிழக்கு நாடுகளில் அமெரிக்கா ஆயுதங்கள் விற்பனை செய்வதையும் சாரிஃப் விமர்சித்துள்ளார்.

மூலக்கதை