கீழடி அகழ்வாராய்ச்சியில் வெளிநாட்டினர் அணியும் அரிய வகை அணிகலன்கள் கண்டுபிடிப்பு!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில், வெளிநாட்டினர் அணியும் அகெட் வகை அணிகலன்கள் கண்டுபிடிக்கப்பட்டன.


சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகில் உள்ள கீழடியில் மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் கடந்த 2015–ம் ஆண்டு முதல் 2017 வரை 3 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதில் உறைகிணறுகள், பானை ஓடுகள், கண்ணாடி மணிகள், தண்ணீர் தொட்டிகள், மருத்துவ குடுவைகள், ஈட்டி, பெண்கள் அணியும் ஆபரணங்கள், கத்தி உள்ளிட்ட பல்வேறு அரிய வகை பொருட்கள் கிடைத்தன.

அதன் பின்னர் தமிழக அரசு சார்பில் ரூ.55 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு மாநில தொல்லியல்துறை சார்பில் 4–ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்றன.

இதிலும் செம்பு நாணயங்கள், தாயக்கட்டைகள், கத்தி, உறை கிணறு என மொத்தம் 5,820 பொருட்கள் கிடைத்தன. அதன் பின்னர் ரூ.47 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு 5–ம் கட்ட ஆராய்ச்சி பணிகள் தொடங்கின. 

அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளின் நிலங்களில் ஏராளமான குழிகள் தோண்டப்பட்டு தற்போது ஆய்வு நடைபெற்று வருகிறது.

மனித எலும்பு துண்டுகள், பாசி மணிகள், பழங்கால எழுத்தாணி உள்ளிட்ட பல பொருட்கள் கிடைத்தன. இதன் மூலம் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்கள் கல்வியறிவு பெற்றுள்ளனர் என்பது பற்றித் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் விவசாயி முருகேசன் என்பவரது நிலத்தில் தோண்டும் போது 7 உறைகள் கொண்ட உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்டது.  இதை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். 

மேலும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மண்ணுக்குள் புதைந்திருக்கும் இந்த உறைகளில் எந்தவித விரிசலும் இல்லாமல் புதிதாக உருவாக்கப்பட்டது போல் காட்சியளிக்கிறது. அதன் பின்னர் வெயில் பட்டவுடன் அந்த உறையில் விரிசல் ஏற்பட தொடங்குகிறது. 

பழங்காலத்தில் இந்த உறைகளை மிக சிறந்த முறையில் அப்போதைய மக்கள் தயாரித்துள்ளனர் என்பதற்கு இது ஒரு உதாரணமாக உள்ளது.

வெளிநாட்டு மக்கள் அணியும் அகெட் என்று அழைக்கப்படும் அரிய வகை அணிகலன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இந்த அணிகலன்கள் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் உள்ள மலைகளில் வெட்டி எடுக்கப்படும் அகெட் வகை கல்லில் செய்யப்பட்டது என்று தெரிய வருகிறது. 

இதன் மூலம் பண்டைய தமிழர்களுக்கும், வெளிநாட்டினருக்கும் நல்ல தொடர்பு இருந்துள்ளது என்றும் தெரிய வருகிறது.

மூலக்கதை