கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறப்பு: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

கேரளா மற்றும் கர்நாடகாவில் தென்மேற்குப் பருவமழை கடந்த 2 நாட்களாக தீவிரமடைந்து உள்ளது. இதனால், இரு மாநிலங்களிலும் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. 84 அடி முழு கொள்ளளவு கொண்ட கபினி அணை, 82 அடியாக நிரம்பியது.

கபினி அணைக்கு நொடிக்கு ஒரு லட்சம் கனஅடி நீர் வந்துகொண்டு இருந்தது. அது அப்படியே காவிரியில் திறந்து விடப்பட்ட நிலையில், பின்னர் ஒன்றேகால் லட்சம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

அதன் உப அணையான தாரகாவில் இருந்து நொடிக்கு 25,000 கனஅடி வீதம் காவிரியில் பாய்கிறது.கே.ஆர்.எஸ் அணையிலிருந்து நொடிக்கு 50,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இதன்காரணமாக காவிரியில் மொத்தமாக 2.40 லட்சம் கனஅடி தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது.

ஒகேனக்கல்  அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. ஒகேனக்கலில் தொடர்ந்து பரிசல் இயக்கவும், சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும் தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நொடிக்கு ஒரு லட்சம் கனஅடியாக அதிகரித்து உள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து வரும் தண்ணீர் வரத்து, இதே அளவில் தொடரும் பட்சத்தில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

காவிரியில் தமிழகத்திற்கு விநாடிக்கு 2.40 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வருவதால், மேட்டூர் அணை ஒரே நாளில் 10 அடி உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை