உச்ச நீதிமன்ற கிளையை, சென்னையில் அமைக்க வெங்கையா நாயுடு வலியுறுத்தல்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வேண்டும் என, துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு பேசினார்.

சென்னையில் நடந்த விழாவில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியதாவது: 
தமிழகம் ஒரு துடிப்பான மாநிலம்; எல்லா துறைகளிலும் தடம் பதிப்பதில், முன்னிலையிலும், முன்னோடியாகவும் திகழ்கிறது. இந்தியா வலிமை மிக்க நாடாக வேண்டும்; ஒருங்கிணைந்த வளர்ச்சி பெற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். தற்போது, உலக நாடுகளின் பார்வை, இந்தியாவின் பக்கம் திரும்பி உள்ளது.


சீர்திருத்தம், நடைமுறைப் படுத்துதல், மறுசீரமைத்தல் போன்றவற்றை, பிரதமர் மோடி, தாரக மந்திராமாக வைத்துள்ளர். இந்தியா, 135 கோடி மக்களுக்கானது.இதில், 18 சதவீத மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழும், 20 சதவீத பேர், கல்வியறிவு இன்றியும் உள்ளனர். இவர்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

அரசின் திட்டங்கள், அனைவரையும் சென்றடைய வேண்டும்.வரும், 15-ந் தேதி, நாட்டின், 73வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், என் சிந்தனைகளை பகிர விரும்புகிறேன்.
நான் ஒரு அரசியல்வாதியாக சொல்லவில்லை. நான் இனி, தேர்தலில் போட்டியிட போவதும் இல்லை; அரசியலுக்கு வரப்போவதும் இல்லை. நான், சமூக விழிப்புணர்வுக்கான பணிகளில் ஈடுபட உள்ளேன்.சட்டசபை, நீதிமன்றம், நிர்வாகம் ஆகிய மூன்றையும் பலப்படுத்த வேண்டும்.

சட்டத்தை இயற்றுவது மட்டுமின்றி, அதை நடைமுறைப்படுத்துவதும், பின்பற்றுவதும் அவசியம். நீதிமன்றங்கள் மிகவும் பொறுப்புடையவை. சட்ட நடைமுறைகள், மக்களுக்கு எளிமையானதாகவும், வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும்.

உச்ச நீதிமன்றத்தில், 60 ஆயிரம் வழக்குகளும், உயர் நீதிமன்றங்களில், 44 லட்சம் வழக்குகளும் நிலுவையில் இருப்பதாக, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, சமீபத்தில் தெரிவித்துள்ளார். வழக்கின் தன்மையை பொறுத்து, அவற்றை உடனடியாக விசாரிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில், ஒரு தேர்தல் வழக்கு, 10 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருக்கிறது. இதற்காக, சிறப்பு நீதிமன்ற தீர்ப்பாயம் அமைக்கப்பட வேண்டும்.

மேலும், உச்ச நீதிமன்ற கிளைகளை விரிவுபடுத்த வேண்டும். முதற்கட்டமாக, உச்ச நீதிமன்ற கிளையை, சென்னையில் அமைக்கலாம்.

அதன்பின், நாட்டின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதியிலும் அமைக்க வேண்டும். நீதியை பெறுவதற்காக, மக்கள் நீண்ட துாரம் பயணம் செய்து, அதிக பணம் செலவிடுவதை இதன் வாயிலாக தவிர்க்கலாம்.

மாநில உயர் நீதிமன்றங்களில், அந்தந்த மாநில மொழிகளிலேயே வாதாட அனுமதிக்க வேண்டும். நீதிபதிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதுடன், அரசியல் சாசன வழக்குகளை விசாரிக்கவும், மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்கவும், தனித் தனி பிரிவுகள் அமைக்கப்பட வேண்டும்.

நீதிபதிகள் தேர்வு முறையில் மாற்றங்கள் வேண்டும், 'கொலீஜியம் முறையில், குறைகள் உள்ளன. இதனால், நீதிபதிகளை நியமிக்க, தேசிய நீதிபதிகள் நியமன கமிஷனை அமைக்க வேண்டும்.
இவ்வாறு வெங்கையா நாயுடு பேசினார்.

மூலக்கதை