தேவை வேகமான நடவடிக்கைகள்

தினமலர்  தினமலர்
தேவை வேகமான நடவடிக்கைகள்

கடந்த சில வாரங்களில் ஏற்பட்டு இருக்கும் பொருளாதார தேக்கம், உடனடியான நடவடிக்கைகளை எதிர்பார்க்கச் செய்துள்ளது.


வேகமான நடவடிக்கைகள் தான், எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ளத் தேவையான துணிச்சலை மக்கள் மனதில் உருவாக்கும்.2009ல் ஏற்பட்ட தேக்கத்தில் இருந்து வெளிவர, அன்றைய அரசு எடுத்த பல நடவடிக்கைகள் பெரிதும் உதவின. அந்த முடிவுகள் விரைவாகவும், காலத்தோடும் எடுக்கப்பட்ட மிக அவசியமான பொருளாதார நடவடிக்கைகள்.இன்றைய சூழலும் கிட்டத்தட்ட, 2009ம் ஆண்டினை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது.



அரசிடம் இப்போது என்ன எதிர்பார்க்கலாம்?



ஒருபுறம், பொருளாதார மந்த நிலை விலக அவசர நடவடிக்கைகள் கோர்வையாகவும், தீர்க்கமாகவும் எடுக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு இருக்கிறது.கிட்டத்தட்ட அவசர நிலையில் மருத்துவம் பார்ப்பது போன்ற உணர்வோடு அரசு செயல்பட வேண்டும். அடுத்தடுத்து முடிவுகள், கொள்கை மாற்றங்கள் மூலம், நம்பிக்கை வளர்க்கும் நகர்வுகளை ஏற்படுத்த வேண்டிய இடத்தில் அரசு இருக்கிறது.



இது, அரசின் மிக உயர்ந்த இடத்தில் இருந்து ஏற்பட்டால் மட்டுமே, தேவையான வேகத்தில் நடக்கும்.மறுபுறம், தொழில் மற்றும் முதலீட்டு உலகம், ஒருவித அச்ச மனப்பான்மையில் உறைந்து கிடக்கிறது. இந்த நிலை மாற வேண்டும்.இதற்கு அரசு பொருளாதார நடவடிக்கைகள் எடுத்தால் மட்டும் போதாது. அரசுடன் தொழில் உலகம் இன்னும் அதிகம் உரையாடி தன் எண்ணங்களை அச்சமின்றி தெரிவிக்க வேண்டும்.இரு தரப்பும் வளர்ச்சி திரும்ப விரைந்து பாடுபட வேண்டும்.



இன்றைய சூழலில் வேகம் மிக அவசியம். தற்போது இந்த கருத்து பரிமாற்றங்கள் நடக்கத் துவங்கி உள்ளன. அடுத்த கட்டமாக, இணைந்த செயல்பாடுகள் ஏற்பட வேண்டும். தொய்வுற்ற தொழில்களை சரிசெய்து, மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செலுத்த ஆவண செய்ய வேண்டும்.அதேசமயம், மேலும் பல தொழில்கள் தொய்வு அடையாமல் தடுக்கும் வண்ணம் கொள்கை முடிவுகள் அமைய வேண்டும்.



உள்நாட்டு முதலீட்டாளர்களின், எஸ்.ஐ.பி., முதலீடுகள் சந்தை ஓரளவு ஸ்திரமாக இருக்க உதவுகின்றன. இவை தொடரும் வண்ணம் அரசின் அறிவிப்புகளும், கொள்கை மாற்றங்களும் அமைய வேண்டும்.பன்னாட்டு முதலீட்டாளர்கள், மீண்டும் இந்திய பங்குகளை வாங்கும் மன நிலைக்கு திரும்ப வேண்டும்.இது நடக்க சில காலம் ஆகும். இதற்கு இடையில் தோன்றும் காலகட்டம் நாம் முதலீட்டு நடவடிக்கைகள் எடுக்க சிறந்த நேரம்.



இந்திய பங்குகளில், இந்தியர்கள் அதிக முதலீடு செய்து, இனிவரும் காலங்களில், அதிக பயன் அடைய, இந்த இடைக்காலம் மிகச்சிறந்த நேரம்.பொருளாதாரத் தேக்கங்களை எதிர்கொள்வது என்பது எளிதல்ல. இதில், அரசுக்கு மிகப் பெரிய பொறுப்பு இருக்கிறது.

மூலக்கதை