ரோஜர்ஸ் கப் டென்னிஸ் 2ம் சுற்றில் டொமினிக் தீம், செரீனா வில்லியம்ஸ் வெற்றி

தமிழ் முரசு  தமிழ் முரசு
ரோஜர்ஸ் கப் டென்னிஸ் 2ம் சுற்றில் டொமினிக் தீம், செரீனா வில்லியம்ஸ் வெற்றி

டொரன்டோ: டொரன்டோவில் நடந்து வரும் ரோஜர்ஸ் கப் டென்னிஸ் தொடரின் 2வது சுற்றுப் போட்டியில் ஆடவர் ஒற்றையரில் முன்னணி வீரர் டொமினிக் தீம் வெற்றி பெற்று 3வது சுற்றுக்கு தகுதி பெற்றார். மகளிர் ஒற்றையரில் செரீனா வில்லியம்ஸ் 3ம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

நேற்று நடந்த ஆடவர் ஒற்றையர் போட்டியில் ஏடிபி  தரவரிசையில் 4ம் இடத்தில் உள்ள ஆஸ்திரிய வீரர் டொமினிக் தீமும், கனடாவின் இளம் வீரர் டெனிஸ் ஷாபாவலோவும் மோதினர். இதில் முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் டொமினிக் தீம் கைப்பற்றினார்.

2வது செட்டில் எழுச்சியுடன் ஆடிய டெனிஸ் ஷாபலோவ், அந்த செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி அதிர்ச்சியளித்தார்.

இருப்பினும் 3வது செட்டை மிக எளிதாக 6-3 என்ற கணக்கில் வசப்படுத்தி, இப்போட்டியில் வென்ற டொமினிக் தீம், 3வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

சென்டர் கோர்ட்டில் இன்று மாலை நடைபெற உள்ள 3வது சுற்றில் குரோஷிய வீரர் மரின் சிலிக்கை எதிர்த்து டொமினிக் தீம் மோதவுள்ளார். முன்னதாக ஆஸி.

வீரர் ஜான் மில்மேனை 2வது சுற்றில் வீழ்த்தியதன் மூலம் மரின் சிலிக், 3ம் சுற்றுக்கு தகுதி பெற்றார்.   நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் 2ம் சுற்று போட்டியில் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்சும், பெல்ஜிம் வீராங்கனை எலைஸ் மெர்டென்சும் மோதினர். இதில் 6-3, 6-3 என்ற செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்ற செரீனா, இந்த வெற்றியின் மூலம் 3ம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.



குரோஷிய வீராங்கனை டோனா வெகிக்கை 7-6, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்ற ரஷ்ய வீராங்கனை கஸ்நெட்சோவாவும் 3ம் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

இன்று நடைபெறும் 3ம் சுற்றுப் போட்டியில்ல் இவர் டபிள்யூடிஏ தரவரிசையில் 4ம் இடத்தில் உள்ள ரொமேனிய வீராங்கனை சிமோனா ஹாலேப்பை எதிர்த்து ஆடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை