4 ஆறுகளை சுத்தப்படுத்த நடவடிக்கை- முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தகவல்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
4 ஆறுகளை சுத்தப்படுத்த நடவடிக்கை முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தகவல்!

பவானி, அமராவதி, வைகை, தாமிரபரணி ஆகிய 4 ஆறுகளை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர்  எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சேலம் புதிய பஸ்நிலையம் அருகில்  அரசு பொருட்காட்சி தொடக்க விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி  பேசியதாவது:
சேலம் மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று மேட்டூர் உபரிநீரை மேட்டூர், எடப்பாடி, ஓமலூர், சங்ககிரி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 100 ஏரிகளில் நிரப்பும் திட்டத்துக்கு ரூ.565 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். 
அதேபோல், காவிரி- கோதாவரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற கடுமையாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் மத்திய அரசு அந்த திட்டத்துக்கு விரிவான அறிக்கையை தயாரிக்கும் பணியை தொடங்கி உள்ளது. 
காவிரி- கோதாவரி ஆறுகள் இணைக்கப்பட்டால் தமிழகத்துக்கு 125 டி.எம்.சி. தண்ணீர் கூடுதலாக கிடைக்கும். இதனால் தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
கங்கை நதியில் கலக்கின்ற மாசுநீரை தடுத்து, அதனை தூய்மைப்படுத்தி புனித நீராக மாற்றுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதேபோல், காவிரி நீரையும் புனித நீராக சுத்தப்படுத்த வேண்டும் என்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினேன். அதற்கு அவரும் காவிரி நீரை சுத்தப்படுத்தி புனித நீராக மாற்றப்படும் என்று உறுதியளித்தார். 
அதேபோல், தமிழகத்தில் பவானி, அமராவதி, வைகை, தாமிரபரணி ஆகிய 4 ஆறுகளில் கழிவுநீர் கலப்பதை தடுத்து சுத்தப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் பருவமழை பொய்த்துவிட்டது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதனால் மழைநீரை சேமித்து வைக்க வேண்டும். அதை கருத்தில் கொண்டு குடிமராமத்து திட்டம் தொடங்கி ஏரி, குளங்களை தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. 2017-ம் ஆண்டில் 1519 ஏரிகளில் தூர்வாரும் பணிகளுக்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த திட்டத்திற்கு பொதுமக்கள், விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் அதன்பிறகு 1511 ஏரிகள், குளங்களை தூர்வார ரூ.308 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது 2018-2019 ஆண்டில் ரூ.500 கோடியில் மேலும் 1829 ஏரி, குளங்களை தூர்வாரும் பணிகள் தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராமப்புற ஏரிகளையும் தூர்வார வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்ததால் தற்போது அதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 
அதாவது, நீர்வள ஆதார இயக்கம் மூலம் கிராமப்புறங்களில் உள்ள ஏரிகளை தூர்வாரும் பணிகளை திருவள்ளூர் மாவட்டத்தில் மஞ்சாங்காரணி ஊராட்சியில் முதன் முதலாக வருகிற 7-ந் தேதி நான் தொடங்கி வைக்க இருக்கிறேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

மூலக்கதை