இந்திய அணிக்கான பயிற்சியாளர் தேர்வு: கபில்தேவ் குழுவே இறுதிசெய்யும்...பிசிசிஐயின் சிஓஏ கூட்டத்தில் அதிரடி

தமிழ் முரசு  தமிழ் முரசு
இந்திய அணிக்கான பயிற்சியாளர் தேர்வு: கபில்தேவ் குழுவே இறுதிசெய்யும்...பிசிசிஐயின் சிஓஏ கூட்டத்தில் அதிரடி

புதுடெல்லி: உலகக் கோப்பை போட்டிக்கு பின் புதிய பயிற்சியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டது. தற்போதைய தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி உள்ளிட்ட இதர பயிற்சியாளர்களுக்கு மேற்கிந்திய தீவுகள் தொடர் வரை 45 நாள்கள் பணிநீட்டிப்பு தரப்பட்டது.

புதிய பயிற்சியாளர் தேர்வுக்கு விண்ணப்பம் அனுப்ப ஜூலை 30ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கபில்தேவ் தலைமையிலான அன்ஷுமன் கெய்க்வாட், சாந்தா ரங்கசாமி ஆகியோர் கொண்ட கிரிக்கெட் ஆலோசனைக் குழு (சிஏசி) புதிய பயிற்சியாளர் நியமனத்தை மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டது.



ஆனால், அவர்கள் ஆதாயம் தரும் இரட்டை பதவி வகிப்பதாக புகார்கள் எழுந்ததால், சிஏசியால் பயிற்சியாளர் நேர்காணலை நடத்த முடியுமா என்ற அச்சம் ஏற்பட்டது. பிசிசிஐயின் சட்டப்பிரிவு பரிசீலனைக்கு பின், சிஓஏ கூட்டம் வினோத் ராய் தலைமையில் நடைபெற்றது.

அதன்பின் வினோத் ராய் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பயிற்சியாளர்களை தேர்வு செய்யும் விவகாரத்தில் சிஏசி எடுக்கும் முடிவே இறுதியானது. ஆகஸ்ட் மத்தியில் நேர்காணல் நடைபெறும்.

வரும் அக்டோபர் 22ம் தேதி பிசிசிஐ நிர்வாகிகள் தேர்தலை ஒட்டி, 26 மாநில சங்கங்கள் முழுமையாக லோதா கமிட்டி பரிந்துரைகளை ஏற்றுள்ளன. தேர்தல் நடத்தவும் அதிகாரிகளை நியமித்துள்ளன.

உச்சநீதமன்றம் நியமித்த மத்தியஸ்தரை இதுதொடர்பாக கலந்து ஆலோசிப்போம்.

26 மாநிலங்கள் தங்கள் தேர்தலை நடத்திக் கொள்ளலாம். மேலும் 4 சங்கங்கள் பரிந்துரையை ஏற்ற நிலையில் தேர்தல் அதிகாரிகளை நியமிக்கவில்லை.

தகுதியானவர்களே வாக்களிக்க அனுமதி தரப்படும். பிசிசிஐ மத்திய தேர்தல் அதிகாரி இதற்கான வழிமுறைகளை அறிவிப்பார்.

பொதுக்குழுவில் பங்கேற்கவுள்ள பிரதிநிதிகள் பெயர்களை அவர் சங்கங்களிடம் கேட்டுப் பெறுவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

.

மூலக்கதை