புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்கும் விவகாரம்..: தற்போதைய நிலையே தொடரும் என மத்திய அரசு அறிவிப்பு

தினகரன்  தினகரன்
புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்கும் விவகாரம்..: தற்போதைய நிலையே தொடரும் என மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில், தற்போதைய நிலையே தொடரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரும் அரசு தீர்மானத்தை கடந்த ஜூலை 17ம் தேதி அன்று முதல்வர் நாராயணசாமி வாசித்தார். அதில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு 70 சதவீதம் மானியமாக வழங்கி வந்தனர். தற்போது படிப்படியாக குரைத்து 25 சதமாக்கியுள்ளனர். அனைத்து மாநிலங்களும் 14வது நிதி கமிஷின் பரிந்துரைப்படி 42 சதவீதம் நிதி ஆதாரத்தை மத்திய அரசிடமிருந்து பெற்று வருகின்றன. புதுச்சேரி யூனியன் ஆட்சிப்பரப்பு இதுவரை மத்திய நிதிக்கமிஷன் வரம்பில் கொண்டுவரவில்லை. நிதி கமிஷனில் இல்லாமலும், மானியங்களும் இல்லாத நிலையில் புதுச்சேரி உள்ளது. சரக்கு மற்றும் சேவை வரியை பொருத்த வரையில் புதுச்சேரியை மாநிலங்களுக்கு இணையாக கருதி நிதியை பிரித்து கொடுத்து வருகிறது. இச்சூழலில் புதுச்சேரியை மாநிலமாக மாற்றுவது அவசியமானதாகிறது. புதுச்சேரி அமைச்சரவைக்கும், சட்டப்பேரவைக்கும் இதர மாநிலங்களில் உள்ளது போல் அதிகாரம் வழங்கவும், மக்கள் நலத்திட்டங்களை நிர்வாக தடைகளின்றி விரைந்து நிறைவேற்றல், அரசு ஊழியர்கள் பணியிடங்களை நிர்ணயம் செய்யவும் புதுச்சேரி ஆட்சி பரப்பு முழு வளர்ச்சி பெற்றிட மாநில அந்தஸ்தை உடனடியாக காலதாமதமின்றி வழங்க மத்திய அரசை புதுச்சேரி சட்டப்பேரவை வலியுறுத்துகிறது என்று தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து தீர்மானத்தை குரல் வாக்கெடுப்புக்கு விட்ட சபாநாயகர் வைத்திலிங்கம் தீர்மானம் நிறைவேற்றப்படுவதாக அறிவித்தார். இந்த தீர்மானமானது,  மத்திய அரசு மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இந்த நிலையில, தீர்மானத்தின் மீதான நிலை என்ன? ஒருவேளை அவை நிலுவையில் உள்ளதா என்று புதுச்சேரி மக்களவை உறுப்பினர் வைத்தியலிங்கம் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கேள்வி எழுப்பியிருந்தார். வைத்தியலிங்கத்தின் கேள்விக்கு, மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக இன்று பதிலளித்துள்ளார். அவர் அளித்துள்ள பதிலில், புதுச்சேரி சட்டப்பேரவை தீர்மானத்தை பரிசீலித்த மத்திய அரசு, தற்போதைய நிலையே தொடர முடிவு செய்துள்ளது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தொடர்பான பரிந்துரை எதுவும் தறபோது நிலுவையில் இல்லை என விளக்கமளித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த முடிவால், புதுச்சேரிக்கு தற்போதைக்கு தனி மாநில அந்தஸ்து கிடைக்காத என்பது தெளிவாகியுள்ளது.

மூலக்கதை