கடன் தொல்லையால் பரிதாபம் துப்பாக்கியால் சுட்டு விவசாயி தற்கொலை

தமிழ் முரசு  தமிழ் முரசு
கடன் தொல்லையால் பரிதாபம் துப்பாக்கியால் சுட்டு விவசாயி தற்கொலை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் கடன் தொல்லை காரணமாக விவசாயி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் ராஜகுமாரி பகுதியை அடுத்துள்ள தூபாறையை சேர்ந்தவர் சந்தோஷ் (46).

விவசாயி. இவருக்கு சொந்தமாக 23 சென்ட் நிலம் உள்ளது.

விவசாயத்துக்காக அங்குள்ள மாவட்ட கூட்டுறவு வங்கியில் ரூ. 4 லட்சம் கடன் வாங்கி இருந்தார். இதை கட்ட முடியாமல் தவித்துள்ளார்.

வங்கியில் இருந்து பலமுறை நோட்டீஸ் அனுப்பி கடனை திருப்பி செலுத்த அறிவுறுத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த மாதம் சந்தோஷ் மரத்தில் இருந்து கீழே விழுந்தார்.

இதில் அவரது முதுகெலும்பில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவ சிகிச்சைக்காக அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் இருந்து சுமார் ரூ. 3 லட்சம் வரை கடன் வாங்கினார். கடன் தொல்லையால் அவர் மனம் உடைந்து காணப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று மாலை அவரது மனைவி ரஜனி மற்றும் மகன் அர்ஜூன் ஆகியோர் வெளியே சென்றிருந்தனர்.

அப்போது சந்தோஷ் வீட்டில் இருந்து துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. உடனே பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் சென்று பார்த்தனர். அப்போது சந்தோஷ் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

அருகில் ஒரு நாட்டு துப்பாக்கியும் கிடந்தது. இதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சந்தோஷ் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இடுக்கி மாவட்டத்தில் இந்த வருடத்தில் மட்டும் கடன் தொல்லை காரணமாக இதுவரை 11 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை