புதிய கல்விக் கொள்கை மாணவர்கள் எதிர்ப்பினால் பாதியில் முடிந்த கூட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
புதிய கல்விக் கொள்கை மாணவர்கள் எதிர்ப்பினால் பாதியில் முடிந்த கூட்டம்

சென்னை: புதிய கல்விக் கொள்கை தொடர்பாக சென்னை ஐஐடியில் நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து கூட்டம் பாதியில் கைவிடப்பட்டது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு தயாரித்த புதிய கல்விக் கொள்கையை கடந்த மாதம் மத்திய அரசு வெளியிட்டது.

இதுகுறித்து நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள், கட்சியினர் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து பொதுமக்கள் கருத்து கேட்ட பிறகே அந்த கல்விக் கொள்கைமீது முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

அதன்படி இம்மாதம் இறுதிக்குள் பொதுமக்கள் தங்கள் கருத்தை தெரிவிக்கலாம் என்று மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் கெடு விதித்துள்ளது.   இந்நிலையில், பல மாநிலங்களில் கருத்து கேட்பு கூட்டங்களை கல்வி நிறுவனங்கள் நடத்தி வருகின்றன. அதற்கும் எதிர்ப்பு எழுந்துள்ளது.



 இந்த பரபரப்பான சூழ்நிலையில், சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள கேந்திரவித்யாலயாவில் நேற்று புதிய தேசிய கல்விக் கொள்கை மீது விவாத கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்துக்கு கேந்திரியவித்யா சங்கதத்தின் துணை ஆணையர் மணி தலைமை தாங்கினார்.

மேலும், இந்த கூட்டம் நடப்பது தொடர்பாக அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் முன்னறிவிப்பு ஏதும் செய்யவில்லை. அதனால் கூட்டம் ரகசியமாக நடக்கிறது என்று செய்தி பரவியது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தந்தை பெரியார் திராவிட கழக இயக்கத்தை சேர்ந்தவர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கருத்து கேட்பு கூட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் கூட்டம் நடத்தியவர்களுக்கும் திராவிடர் கழகத்தினருக்கும் இடையே பெரும் வாக்குவாதம் நடந்தது.

நீண்ட நேர வாக்குவாதம் மற்றும் போராட்டத்துக்கு பிறகு அந்த கூட்டத்தை கேந்திரியவித்யா சங்கதத்தின் ஆணையர் ரத்து செய்தார்.


.

மூலக்கதை