3 மாதங்களில் பெண் குழந்தைகளே பிறக்காத 132 கிராமங்கள்

தினமலர்  தினமலர்
3 மாதங்களில் பெண் குழந்தைகளே பிறக்காத 132 கிராமங்கள்

உத்தரகாசி: உத்தரகண்ட் மாநிலத்தில், 132 கிராமங்களில், கடந்த மூன்று மாதங்களில், ஒரு பெண் குழந்தை கூட பிறக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து , பெண் சிசு கொலை நடப்பதை, அரசு கண்டு கொள்ளவில்லை என, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


உத்தரகண்ட் மாநிலத்தில், முதல்வர், திரிவேந்திர சிங் ராவத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, உத்தரகாசி மாவட்டத்தின், 132 கிராமங்களில், மூன்று மாதங்களில், 216 குழந்தைகள் பிறந்துள்ளன. அதில், ஒரு குழந்தை கூட பெண் குழந்தை இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கலெக்டர் எச்சரிக்கை


இது குறித்து, உத்தரகாசி மாவட்ட கலெக்டர், ஆசிஷ் வுகான், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில், எம்.எல்.ஏ., ராவத் பங்கேற்றார். பின், நிருபர்களிடம் பேசிய கலெக்டர், ''ஆண், பெண் விகிதம் சரிந்திருப்பது சற்று அதிர்ச்சியாக இருக்கிறது. மருத்துவ ரீதியாகவும், சிசுக்கள் கொலை செய்யப்படுகின்றனரா என்பது குறித்து, கிராமங்களில் ஆய்வு நடத்தப்படும். ''பெண் சிசு கொலை செய்யப்படுவது கண்டறியப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


சமூக சேவகி கல்பனா தாக்கூர், ''இது இயல்பாக நடந்தது அல்ல. இந்த புள்ளிவிபரத்தின் மூலம், உத்தரகாசி மாவட்டத்தில், பெண் சிசு கொலை நடப்பது உறுதியாகியுள்ளது. ''அரசு நடவடிக்கை எடுக்காமல் மிக மெத்தனமாக இருக்கிறது. இனி மேலாவது அரசு அதிகாரிகள் விழித்துக் கொள்ள வேண்டும்,'' என்றார்.

மூத்த பத்திரிகையாளர், ஷிவ் சிங் தன்வால், ''இந்த புள்ளிவிபரம் கேட்டவுடன், மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். மாவட்ட நிர்வாகம் மிக விழிப்புடன் பணியாற்ற வேண்டும். ''குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கின்றனர். குழந்தைகளை காப்பாற்ற, அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

மூலக்கதை