வரத்துக்கால்வாயில் குப்பையை கொட்டுவதால் பாதிப்பு! மாடக்குளம் கண்மாய்க்கு நீர்வரத்து இல்லை

தினமலர்  தினமலர்
வரத்துக்கால்வாயில் குப்பையை கொட்டுவதால் பாதிப்பு! மாடக்குளம் கண்மாய்க்கு நீர்வரத்து இல்லை

மதுரை : மதுரையின் நீர் ஆதாரமான மாடக்குளம் கண்மாய் வரத்துக் கால்வாய்களில் குப்பையை தொடர்ந்து கொட்டுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், நீர்வரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இக்கண்மாயில் குடிமராமத்து பணிகள் விவசாயிகளின் பங்களிப்பு நிதியுடன் 87 லட்சம் ரூபாயில் நடக்கிறது. பெரியாறு வைகை அணைகளின் உபரி நீர் கண்மாய்க்கு வரும். இதற்காக கொடிமங்கலம் - மாடக்குளம் இடையே 12.3 கிலோ மீட்டர் துாரத்திற்கு அச்சம்பத்து வழியாக வரத்து கால்வாய் உள்ளது. இதில் 2 கி.மீ., துாரத்திற்கு பொதுப்பணித்துறை சார்பில் பராமரிப்பு பணி முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 10.3 கி.மீ., துாரத்திற்கு பராமரிப்பு பணி நடக்கவுள்ளது.

இந்நிலையில் அச்சம்பத்து, டி.கே.தங்கமணி நகர் வழியாக வரும் வரத்து கால்வாய்களில் அருகில் குடியிருப்போர் தொடர்ந்து குப்பையை கொட்டுகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. மேலும் மழை நீர் கண்மாய்க்கு செல்ல வழியின்றி கால்வாயில் குப்பையால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களுக்கு பொதுப்பணித் துறை சார்பில் பலமுறை கடிதம் எழுதியும் பயனில்லை. குப்பையை கொட்டுவதை தடுத்து மழை நீர் கண்மாய்க்கு வர கலெக்டர் ராஜசேகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

மூலக்கதை