மகாராஷ்டிராவில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கூறும்படி 2 பேரை மிரட்டிய கும்பல்: 5 மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

தினகரன்  தினகரன்
மகாராஷ்டிராவில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கூறும்படி 2 பேரை மிரட்டிய கும்பல்: 5 மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

அவுரங்காபாத்: மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் நகரில் அடையாளம் தெரியாத சிலர் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று சொல்லும்படி 2 பேரை மிரட்டிய சம்பவத்தால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.  அவுரங்காபாத்தை சேர்ந்த ஷேக் அமீர் மற்றும் அவருடைய நண்பர் ஷேக் நசீர் ஆகிய இருவரும் ஆன்லைன் உணவகம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்கள். நேற்று முன்தினம் இரவு ஆட்டோ பிடிப்பதற்காக நகரின், ஆசாத் சவுக் பகுதியில் காத்திருந்தனர். அப்போது காரில் வந்த அடையாளம் தெரியாத 5 பேர் அவர்கள் இருவரையும் வழிமறித்து அவர்களுடைய மதம் பற்றி இழிவாக பேசியதுடன் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கூறாவிட்டால் கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். பயந்துபோன இருவரும் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கூறினர். அந்த பகுதியில் மக்கள் கூடுவதைப் பார்த்ததும் காரில் இருந்தவர்கள் தப்பியோடி விட்டனர். நண்பர்கள் இருவரும் நடந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தனர். சம்பவத்தில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவுரங்காபாத் போலீஸ் கமிஷனர் சிரஞ்சீவ் பிரசாத் கூறினார். மேலும் நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் போலீசாருக்கு பொதுமக்கள் உதவ வேண்டும் என்றும் அவர் கூறினார். கடந்த வெள்ளிக்கிழமை அவுரங்காபாத், பேகம்புரா பகுதியில் உள்ள ஹட்கோ கார்னர் அருகே நடந்த சம்பவம் ஒன்றில் ஓட்டல் தொழிலாளி ஒருவரை ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கூறும்படி அடையாளம் தெரியாத சிலர் வற்புறுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக பின்னர் ஒருவர் கைது செய்யப்பட்டார். ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கூறும்படி சிறுபான்மையினரை மிரட்டும் சம்பவங்கள் சமீப காலமாக மகாராஷ்டிராவின் தானே உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடந்து வருகிறது.

மூலக்கதை