காஷ்மீர் ஆளுநர் சர்ச்சைப் பேச்சு ஊழல்வாதிகளை கொல்லுங்கள்: தீவிரவாதிகளுக்கு வேண்டுகோள்?

தினகரன்  தினகரன்
காஷ்மீர் ஆளுநர் சர்ச்சைப் பேச்சு ஊழல்வாதிகளை கொல்லுங்கள்: தீவிரவாதிகளுக்கு வேண்டுகோள்?

ஸ்ரீநகர்: காஷ்மீரை கொள்ளை அடித்த ஊழல்வாதிகளை கொல்லுங்கள் என  மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் பேசியிருப்பது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. காஷ்மீரில்  தேசிய மாநாட்டு கட்சியைச் சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் ரஹீம் ராதரின்  மகன், ஸ்ரீநகர் துணை மேயர் ஷேக் இம்ரான் ஆகியோரது வீட்டில் வருமான  வரித்துறை அதிகாரிகள் கடந்த வாரம் சோதனை நடத்தினர். அதேபோன்று, முந்தைய பிடிபி-பாஜ  கூட்டணி ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் மெகபூபா முப்திக்கு  மிகவும் நெருங்கியவருமான நயீம் அக்தரிடம் சிபிஐ அதிகாரிகள் கடந்த  சனிக்கிழமை  விசாரணை நடத்தினர். அந்த அளவுக்கு தலைவர்களிடையே ஊழல் மலிந்துள்ளதாக மாநிலம் முழுவதும் பரவலாக பேச்சு எழுந்துள்ளது.இதனிடையே தேசிய மாநாட்டு கட்சித்  தலைவர் சையத் தாகுயிரின் பாதுகாவலர்கள் இருவர், மக்கள் ஜனநாயக கட்சித்  தலைவர் முப்தி சஜாத் ஆகியோர் தீவிரவாதிகளால் கடந்த வாரம் சுட்டுக்  கொல்லப்பட்டனர்.இந்நிலையில், கார்கிலில் நடந்த 2019ம் ஆண்டு சுற்றுலா விழாவை  நேற்று முன்தினம் தொடங்கி வைத்தபோது மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் பேசியதாவது: துப்பாக்கி ஏந்திய இளைஞர்கள் அப்பாவி  மக்களையும், பாதுகாப்பு அதிகாரிகளையும், ராணுவ வீரர்களையும் சுட்டுக்  கொல்லுகின்றனர். அவர்களை ஏன் கொல்கிறீர்கள்? காஷ்மீரின் வளங்களை கொள்ளை  அடித்த ஊழல்வாதிகளை கொல்லுங்கள். அதை  விடுத்து துப்பாக்கியை தூக்குவதால் ஒன்றும் நடந்து விடாது.துப்பாக்கியால் மத்திய அரசை பணிய வைக்க யாராலும் முடியாது. இலங்கையில் தமிழீழ  விடுதலைப்புலிகள் என்ற அமைப்பு செயல்பட்டு வந்தது. உலகில் உள்ள தீவிரவாத  அமைப்புகளிலேயே மிகப்பெரிய, சக்தி வாய்ந்த இயக்கமாக கருதப்பட்டது. அவர்களே முற்றிலுமாக  அழிக்கப்பட்டனர். அரசை எதிர்த்து போரிட உங்களால் முடியாது.  பேச்சுவார்த்தையின் மூலமே அனைத்தையும் பெற முடியும். இங்குள்ள கட்சியின் தலைவர்கள் டெல்லியை  அச்சுறுத்தும் விதத்திலும், காஷ்மீரில் தூண்டிவிடும்  வகையிலும் பேசுகின்றனர். அவர்கள் ஏதாவது ஒரு வழியை தேர்ந்தெடுத்து பேச வேண்டும். உங்களுக்கு இரண்டு சொர்க்கங்களை  காட்டுகிறேன். ஒன்று பேரரசர் ஜஹாங்கீர் கூறியதுபோல சொர்க்க பூமியான  காஷ்மீர். மற்றொன்று, திறமையான உங்கள் குழந்தைகளை நன்றாக படிக்க வைத்து  சிறந்த மருத்துவர்களாக வளருங்கள். அதன்பின் இறக்கும்போது அங்கு உங்களுக்கான மற்றொரு சொர்க்கம் திறந்திருக்கும்.

மூலக்கதை