தகவல் அறியும் உரிமைச் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்: காங்கிரஸ் உள்ளிட்ட எதிரிக்கட்சிகள் கடும் எதிர்ப்பு

தினகரன்  தினகரன்
தகவல் அறியும் உரிமைச் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்: காங்கிரஸ் உள்ளிட்ட எதிரிக்கட்சிகள் கடும் எதிர்ப்பு

டெல்லி: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைத் திருத்தும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. கடந்த 2005ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு அமலில் இருக்கும் தகவல் அறியும் உரிமைச்  சட்டத்தில் (ஆர்டிஐ) திருத்தம் செய்வதற்கான  மசோதாவை பிரதமர் அலுவலக அமைச்சர் ஜிஜேந்திர சிங் கடந்த 19-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இத்திருத்த மசோதாவின்படி, தலைமைத் தகவல் ஆணையர், தகவல் ஆணையர்களின் ஊதியம், பணிக்காலம், இதர  மானியங்கள் குறித்த விதிமுறைகளை மத்திய அரசு அரசுதான் முடிவு செய்யும். மாநில அரசுகள் முடிவு செய்ய முடியாது என்ற நிலை ஏற்படும். இந்நிலையில், கடந்த 19-ம் தேதி மக்களவையில் இது தொடர்பான விவாதத்தின் போது  அமைச்சர் ஜிஜேந்திர சிங் பேசியதாவது:தேர்தல் ஆணையத்தின் பணியும், தகவல் ஆணையத்தின் பணியும் வெவ்வேறானவை. தேர்தல் ஆணையம்  அரசியலமைப்பு சட்டத்தின் ஓர் அங்கம். ஆனால், தகவல் அறியும் உரிமை  சட்டம் 2005ன் கீழ்  அமைக்கப்பட்டுள்ள மத்திய தகவல் ஆணையம், மாநில தகவல்  ஆணையம் என்பவை அரசியலமைப்பு சட்டம் சாராத அமைப்பாகும்.தகவல் அறியும் உரிமை சட்டத்தின் செயல்பாட்டினை ஒழுங்குபடுத்தவே இது அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இதன் நிர்வாக நோக்கம், சட்ட செயல்பாடு, கட்டமைப்பு ஆகியவை வலுப்படுத்தப்படும். பிரதமர் மோடி அரசின் வெளிப்படைத்தன்மை  குறித்து யாரும் கேள்வி எழுப்ப முடியாது. ஏனெனில்,  அவர் உறுதி அளித்தது போல், குறைந்தளவு எண்ணிக்கையிலான அமைச்சர்களை கொண்டு அதிகப்பட்ச நிர்வாகத்தை வழங்கி வருகிறார். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் காலை 10 மணி  முதல் மாலை 5 மணி வரை மட்டுமே ஆர்டிஐ மனு தாக்கல் செய்ய முடியும். ஆனால், மோடி ஆட்சியில் எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் ஆர்டிஐக்கு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.ஆனால், ‘இந்த மசோதா நாட்டில் செயல்படும் கமிட்டிகளின் வெளிப்படைத்தன்மையை வலுவிழக்க செய்யும்,’ என்று எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் மக்களவைத் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில்,   ``தகவல் ஆணையர்களின் சுய அதிகாரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இது இருக்கிறது,’’  என்றார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைத் திருத்துவது என்ற பெயரில் அச்சட்டத்தை பா.ஜ.க. அரசு ஒழிப்பதாக சசிதரூர் காங்கிரஸ்  எம்.பி.ர். குற்றம்சாட்டினார். பொதுமக்களின் கருத்தை அறியாமல் அவசர அவசரமாக மசோதாவை தாக்கல் செய்தது ஏன் என்று மக்களவையில் சசிதரூர் கேள்வி எழுப்பியுள்ளார். தகவல் ஆணையர்களின் சுதந்திரத்தை பறிக்கும் நோக்கில்  சட்டத்திருத்தம் செய்யப்படுவதாக காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் குற்றசாட்டியுள்ளார்.இந்நிலையில், தி.மு.க., காங்கிரஸ், வி.சி.க.,தெலுங்கு தேசம் கட்சிகள் கடும் எதிர்ப்புகளை மீறி தகவல் அறியும் உரிமைச் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மசோதா நிறைவேற போதிய உறுப்பினர்கள் மத்திய பாஜக  அரசுக்கு மாநிலங்களவையில் உள்ளதால், விரைவில் தகவல் அறியும் உரிமைச் சட்டத் திருத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை