ராமசாமியார் நினைவு மண்டபம் விரைவில் திறக்கப்படும்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
ராமசாமியார் நினைவு மண்டபம் விரைவில் திறக்கப்படும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

சுதந்திரப் போராட்ட வீரர் ராமசாமியார் நினைவு மண்டபம் விரைவில் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.

சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ்.ராமசாமியாரின் முழு உருவப் படத்தை சட்டப் பேரவை மண்டபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி  திறந்து வைத்தார்.

1952-ஆம் ஆண்டு தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியைத் தோற்றுவித்து, அதே ஆண்டில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் ராமசாமியார் உள்பட 19 பேர் வெற்றி பெற்றனர். மக்கள் பணியாற்றுவதில் மற்ற தலைவர்களுடன் இணக்கமாகச் செயல்பட்டவர் ராமசாமியார்.

ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனிலும், முன்னேற்றத்திலும் அதிக அக்கறை எடுத்துக் கொண்ட தலைவர்களில் முதல் வரிசையில் திகழ்ந்தவர் ராமசாமியார்.

வன்னியர் சமுதாயத்துக்கு மாநிலத்தில் 20 சதவீத ஒதுக்கீடும், மத்தியில் 2 சதவீத ஒதுக்கீடும் அளிக்க வேண்டுமென்ற தீர்மானத்தை உழைப்பாளர் கட்சி மாநாட்டில் நிறைவேற்றி தீர்மானம் நிறைவேற தொடர்ந்து அவர் அழுத்தம் கொடுத்து வந்தார்.

பின்தங்கிய மக்களுக்காக உழைத்த ராமசாமியாரைச் சிறப்பிக்க கடலூர் மாவட்டத்தில் நினைவு மண்டபமும், முழு உருவ வெண்கலச் சிலையும் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்து இருந்தார். 
அதன்படி, கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் ராமசாமியாருக்கு 1.5 ஏக்கர் அரசு நிலம் ஒதுக்கி நினைவு மண்டபமும், வெண்கலச் சிலையும் அமைக்க அடிக்கல்லும் நாட்டப்பட்டது.  இந்த நினைவு மண்டபம் விரைவில் திறக்கப்படும் என்று சட்டப்பேரவையில் படத்தைத் திறந்து வைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

விழாவிற்கு சபாநாயகர்  ப.தனபால் தலைமை தாங்கிப் பேசினார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.

விழாவில், பொள்ளாச்சி ஜெயராமன்,  மு.க.ஸ்டாலின், துரைமுருகன் மற்றும் அன்புமணி ராமதாஸ், கோ.க.மணி,  ஏ.கே.மூர்த்தி, கிருஷ்ணசாமி,  பொன்னையன், வளர்மதி,  மைத்ரேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கி.சீனிவாசன் நன்றி கூறினார்.

முழு உருவப் படத் திறப்பு விழாவில், ராமசாமியாரின் மகன் ராமதாஸ் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டனர். 

பேரவை மண்டபத்தில் ஏற்கனவே காந்தியடிகள், ராஜாஜி, நேரு, திருவள்ளுவர், அண்ணா, காமராஜர், முத்துராமலிங்கத்தேவர், பெரியார், அம்பேத்கர், காயிதேமில்லத், ஜெயலலிதா ஆகிய 11 தலைவர்களின் படங்கள் இடம்பெற்றுள்ளன. இப்போது, ராமசாமியாரின் முழு உருவப் படம் 12-ஆவதாக இடம்பெற்றுள்ளது.
ஒவ்வொரு உருவப்படத்துக்கு கீழும், அவர்களின் செயல்பாடுகளை ஒரு வரியில் விளக்கும் வகையில் வாசகங்கள் இடம்பெற்று உள்ளன.

அந்த வகையில், ராமசாமியாரின் உருவப் படத்துக்குக் கீழே, "வீரம்-தீரம்-தியாகம்' என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

மூலக்கதை