நவம்பர்- 1 இனி தமிழ்நாடு நாள்- சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
நவம்பர் 1 இனி தமிழ்நாடு நாள் சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

நவம்பர் 1-ம் தேதி இனி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டார். 
நவம்பர் 1-ந் தேதியை தமிழ்நாடு நாளாக அறிவிக்கக் காரணமான பின்னணியை அறிந்து கொள்வோம்.
'மதராஸ் மாகாணம்' என்ற பெயர் இருக்கக் கூடாது, அதனை தமிழ்நாடு என பெயர் மாற்றுங்கள்" என்று கூறி தொடர் உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்தவர் தியாகி சங்கரலிங்கனார்.
மொத்தம் 75 நாள் உண்ணாவிரதம் இருந்து மொழிக்காக  உயிரையே விட்ட தியாகி இவர்தான். இத்தனைக்கும் இவர் அப்போது எந்த அரசியல் கட்சியையும் சாராதவர்.
அதுமட்டுமல்ல, யாருக்கும் எந்தவிதத்  தொந்தரவும் இல்லாமல் தன் வீட்டு வாசற்படியிலேயே அமர்ந்து உண்ணாவிரதம் இருந்தவர் இவர்.
சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்த ஒவ்வொரு நாளும் நாடு முழுவதும் செய்திகள் பரபரப்பாகப் பேசப்பட்டன.  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைவராக ஓடி வந்தார்கள். 
உண்ணாவிரதத்தை  நிறுத்திக் கொள்ளுமாறு ம.பொ.சி, காமராசர்,  ஜீவா எனப் பலர் கோரிக்கை விடுத்தும்,  சங்கரலிங்கனார் அதனை ஏற்கவில்லை.
இறுதியாக, சங்கரலிங்கனார் அறிஞர் அண்ணாவிடம், 'அண்ணா! நீங்களாவது என்னுடைய ‘தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்கையை' நிறைவேற்ற சொல்லுங்கள். நான் இறந்த பிறகாவது என் கோரிக்கையை நிறைவேற்று வார்களா? ' என்று ஏக்கமாகக் கேட்டார். 
76-வது நாள் உடல்நிலை மோசமாகி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரும் பிரிந்து விட்டது. அப்போது அவருக்கு 78 வயது.
சங்கரலிங்கனாரின் உண்ணாவிரதமும், கோரிக்கையும், மறைவும் தமிழக அரசியலைப் பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
 ‘தமிழ்நாடு' என்று பெயர் சூட்ட அழுத்தங்கள் தரப்பட்டன. ஆனால் அன்றைய அரசு எதற்கும் செவிசாய்க்கவில்லை. 
அறிஞர் அண்ணா முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு அரசு பெயரை மாற்றி வரலாறு படைத்தது.1968 ஜூலை 18-ம் தேதி மெட்ராஸ் ஸ்டேட் என்பதை ‘தமிழ்நாடு' எனப் பெயர் மாற்றி தீர்மானமும் கொண்டு வரப்பட்டது. 
அதே ஆண்டு நவம்பர் மாதத்தின் முதல் நாள், தமிழக அரசின் பெயர் மாற்ற சட்ட முன்வடிவு நாடாளு மன்றத்திலும் நிறைவேற்றப்பட்டது. அது மட்டுமல்ல, நவம்பர் 1ம் தேதிதான் மொழி வழி மாநிலங்கள் பிறந்தன. 
ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தில் இருந்து கர்நாடகம், கேரளம் உள்ளிட்டவை பிரிந்து சென்றன. அந்த மாநிலங்களில் இந்த நாளை சிறப்பாக மாநிலம் பிறந்த நாளாக கொண்டாடி வருகின்றனர். 
இதன் அடிப்படையில் நவம்பர் 1ம் தேதியை தமிழ்நாடு பிறந்த நாளாக கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கை இதுவரை இருந்து வந்தது.
இந்த வரலாற்று சம்பவத்தின் தொடர்ச்சியாகவே, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்வர் பேசும் போது இதனை அறிவித்து உள்ளார்.
 'ஆண்டுதோறும் நவம்பர் 1 ம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும்' என்ற  அறிவிப்பினை வெளியிட்ட போது, உறுப்பினர்கள் அனைவரும் கரகோஷம் எழுப்பி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

மூலக்கதை