ராணுவ துணை தளபதியாக மனோஜ் முகுந்த் நியமனம்

தினகரன்  தினகரன்
ராணுவ துணை தளபதியாக மனோஜ் முகுந்த் நியமனம்

புதுடெல்லி: ராணுவத்தில் தற்போது துணை தளபதியாக இருக்கும் ஜெனரல் தேவராஜ் அன்புவின் பணிக்காலம் வரும் ஆகஸ்ட் 31ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதையடுத்து தற்போது ராணுவத்தின் கிழக்குப் பிரிவு தலைமை கமாண்டராக உள்ள முகுந்த் நரவேன் துணை தளபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ராணுவத் தளபதி பிபின் ராவத் இந்தாண்டு டிசம்பர் 31ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளதால், அடுத்த மூத்த தளபதி என்ற அடிப்படையில் மனோஜ் முகுந்த் நரவேன் ராணுவத் தளபதியாக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ராணுவத்தில் 37 ஆண்டுகளாக பணியாற்றி வரும் மனோஜ் முகுந்த், தீவிரவாத ஒழிப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டவர். ஜம்மு காஷ்மீரில் ராஷ்டிரிய ரைபிள் பட்டாலியன், காலாட்படை பிரிகேடியர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பல பதவிகளை வகித்துள்ளார். ராணுவ செயல்பாடுகளின் பொது இயக்குநராக இருந்த ஜெனரல் அனில் சவுகான், மனோஜ் முகுந்துக்கு பதிலாக கிழக்கு பிரிவு தலைமை கமாண்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மூலக்கதை