திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கேஸ் அடுப்புக்கு பதிலாக நீராவி பயன்படுத்தி பூந்தி தயாரிக்க முடிவு: தீ விபத்தை தடுக்க நடவடிக்கை

தினகரன்  தினகரன்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கேஸ் அடுப்புக்கு பதிலாக நீராவி பயன்படுத்தி பூந்தி தயாரிக்க முடிவு: தீ விபத்தை தடுக்க நடவடிக்கை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தீ விபத்தை தடுக்க கேஸ் அடுப்புக்கு பதிலாக நீராவி பயன்படுத்தி பூந்தி தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பதியில் தினந்தோறும் 3 லட்சம் லட்டுகள் தயார் செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக கோயிலுக்கு வெளியே பூந்தி தயாரிக்கும் மையம் அமைக்கப்பட்டு அங்கிருந்து  தயார் செய்யப்பட்ட பூந்தி கோயிலுக்கு கன்வேயர் பெல்ட் மூலமாக கொண்டு செல்லப்பட்டு லட்டு தயார் செய்து விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.  மூன்று சுற்றுகளாக சுழற்சி முறையில் கடலை மாவைக் கொண்டு கடாயில் கேஸ் அடுப்பில் நெய்கொண்டு பூந்தி தயாரிக்கப்பட்டு வருகிறது. இதனால்  வெப்பத்தின் தாக்கத்தால் பூந்தி தயாரிக்கும் மையத்தில் மேல் மற்றும்  பக்கவாட்டு சுவர்களில் நெய் படிமம் படிந்து அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது. இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்தனர். இதையொட்டி முன்னாள்  இணை செயல் அலுவலராக இருந்த சீனிவாச ராஜு தலைமையில் தேவஸ்தான பொறியாளர்கள்  சென்னையில் உள்ள பிரபல இனிப்பக தொழிற்சாலைக்கு சென்று இனிப்புகள் தயார் செய்யும் முறையை ஆய்வு செய்தனர். இதையடுத்து அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய எளிதில் தீப்பிடிக்காத வகையில் பூந்தி தயாரிக்கும் மையத்தில் மாற்றங்களைக் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. அதன்படி தற்போது கேஸ் மூலமாக நெய் கடாயில் கொதிக்க வைக்கப்பட்டு வரும் நிலையில் அதனை நீராவி பயன்படுத்தி நெய்யை சுட வைக்க முடிவு செய்துள்ளனர். இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

மூலக்கதை