'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களை உருவாக்க புதிய திட்டம் ரெடி! மாணவரை ஆராய்ச்சியாளராக்க தீவிர முயற்சி

தினமலர்  தினமலர்
ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உருவாக்க புதிய திட்டம் ரெடி! மாணவரை ஆராய்ச்சியாளராக்க தீவிர முயற்சி

திருப்பூர்:புதிய பாடத்திட்டம் மூலம், மாணவர்களை கண்டுபிடிப்பாளர்களாக மாற்றி, ஆடை உற்பத்தி துறைக்கான 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களை உருவாக்க இன்குபேஷன் மையம் திட்டமிட்டுள்ளது.திருப்பூர், முதலிபாளையம் சிட்கோ வளாகத்தில், மத்திய அரசு உதவியுடன், ஆடை உற்பத்தி துறைக்கான அடல் இன்குபேஷன் மையம் செயல்பட்டு வருகிறது. புதிய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகளுக்கு, இம்மையம் செயல்வடிவம் கொடுக்கிறது.
தொழில்முனைவோர் பலர், இன்குபேஷன் மையத்தை பயன்படுத்தி, புதியவகை ஆடை ரகங்களை உருவாக்கி வருகின்றனர். பேராசிரியர்கள், மாணவர்களிடம் உள்ள புதிய தகவல்களை பெற்று, அவற்றுக்கு வடிவம் கொடுப்பதற்காக, இன்குபேஷன் மையம், பல்வேறு கல்லுாரிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.இதன் தொடர்ச்சியாக, கல்லுாரி மாணவர்களை ஆராய்ச்சியாளராக மாற்றி, ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உருவாக்க இன்குபேஷன் மையம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, ப்ரீ இன்குபேஷன் பார் ஸ்டார்ட் அப் என்கிற பெயரில், புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுவருகிறது.வரும் ஆகஸ்ட் மாதம் முதல், கல்லுாரி மாணவர்களை தேர்வு செய்து, பயிற்சி அளிக்க உள்ளனர்.
அடல் இன்குபேஷன் மைய நிர்வாக செயல் அதிகாரி பெரியசாமி கூறியதாவது:அடல் இன்குபேஷன் மையம், தற்போது, ஏற்கனவே கண்டுபிடிப்புகளை தன்வசம் வைத்திருப்போருக்கு, அதனை மேம்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கி வருகிறது. அடுத்தகட்டமாக, மாணவர்களுக்கு பயிற்சி அளித்து, அவர்களை புதிய கண்டுபிடிப்பாளராக மாற்ற உள்ளோம்.இதற்காக, புதிய பாடத்திட்டம் தயாராகிவருகிறது.
இந்த பாடத்திட்டத்தில், கல்லுாரி மாணவர்களுக்கு, ஆடை உற்பத்தி துறையில் புதுமைகளை உருவாக்கும் நுட்பங்கள் குறித்து, ஓராண்டு பயிற்சி அளிக்கப்படும். நிட்டிங், டையிங், பிரின்டிங் என ஆடை உற்பத்தி துறை சார்ந்த பல்வேறு நிறுவனங்களுக்கு மாணவர்கள் அழைத்துச்செல்லப்படுவர்.இதன்மூலம், எந்தெந்த துறையில் என்னென்ன பிரச்னைகள் உள்ளன என்பதை மாணவர்கள் உணர்வர்; ஆலோசனைகள், ஆய்வுகள் மூலம், பிரச்னைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகளை மாணவர்கள் உருவாக்குவர்.மாணவர்களின் இத்தகைய ஆய்வுகளுக்கு செயல்வடிவம் கொடுக்கப்படும். அடுத்தகட்டமாக, உருவாக்கப்படும் புதிய நுட்பங்களை அடிப்படையாக கொண்டு, ஆயத்த ஆடை துறைக்கான புதிய ஸ்டார்ட் அப் நிறுவனம் உருவாகவும், இன்குபேஷன் மையம் முழுமையான உதவிகள் செய்யும்.
இதன்மூலம், ஆடை உற்பத்தி துறை சார்ந்த பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுவதோடு, ஏராளமான ஸ்டார்ட் அப் நிறுவனங்களையும் உருவாக்க முடியும்.சாதாரண நிறுவனங்கள், முதலீடு, வர்த்தகத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு இயங்கும். ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், முற்றிலும் மாறுபட்ட, புதுமையான கண்டுபிடிப்புகளை மையமாக கொண்டு இயங்கும். எனவே, இவ்வகை நிறுவனங்கள், சிறப்பான வளர்ச்சி பெறமுடியும்.பல்வேறு கல்லுாரிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேர்வுகள் நடத்தி, தகுதியுள்ள மாணவர்களுக்கு, புதுமைகளை உருவாக்கும் யுத்திகள் குறித்த பயிற்சிகள் அளிக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை